ஆளில்லா வானூர்தியின் உரிமையாளர்கள் குறைந்தது 16 வயதை அடைந்திருக்கவேண்டும். அதோடு, 250 கிராமுக்கு மேலான எடையுள்ள வானூர்திகள் பதிவு செய்யப்படவேண்டும். வெளிநாட்டவர்கள், சுற்றுப்பயணிகள் உட்பட அனைவரும், சிங்கப்பூரில் ஆளில்லா வானூர்தியை இயக்குவதற்கு முன்பாகக் கட்டாயப் பதிவுக்கு உட்படவேண்டும்.
ஆளில்லா வானூர்தியின் பயன்பாட்டுக்கான சட்டமைப்பைப் பரிந்துரைப்பதற்காக அரசாங்கம் அமைத்திருந்த ஆலோசனைக் குழுவின் முக்கிய பரிந்துரைகளில் இவை உள்ளடங்கும்.
குழுவின் மற்ற பரிந்துரைகள்:
- வர்த்தகத்திற்கான அல்லது சுயமாகப் பொருத்தப்பட்ட ஆளில்லா வானூர்திகள் அனைத்தும் பதிவின்கீழ் இடம்பெறவேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட வானூர்திகளை அடையாளம் காண்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் பதிவு வில்லை போன்ற ஏதாவதொன்று பயன்படுத்தப்படவேண்டும்.
- பதிவு சுலபமாகவும், வசதியாகவும், கட்டுப்படியாகும் விலையிலும் இருக்கவேண்டும். ஒரு கருவிக்கு அதிகபட்சம் $20 வரையிலான பதிவுக் கட்டணம் விதிக்கப்படலாம்.
- பதிவு செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் தரப்படலாம்.
இந்தப் பரிந்துரைகள் தவிர, வானூர்தி சார்ந்த மற்ற விவகாரங்களையும் ஆலோசனைக் குழு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. பரிசீலனை முடிவடைந்தவுடன் பரிந்துரைகளைக் குழு சமர்ப்பிக்கும்.
தற்போது, விமான நிலையங்கள் அல்லது ராணுவ விமானத்தளங்களிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் அல்லது 61 மீட்டருக்கு மேலான உயரத்தில் அனுமதியின்றி வானூர்திகளைப் பறக்கவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுவோருக்கு $20,000 வரையிலான அபராதமும் ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
ஜூன் மாதம் சாங்கி விமான நிலையத்தில் ஆளில்லா வானூர்திகள் இரண்டு முறை அத்துமீறி ஊடுருவியதால் 55 விமானப்பயணங்கள் தடைப்பட்டு, எட்டு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்து, வானூர்திகளைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் ஆராயப்படுகின்றன.

