ஜூரோங் தீவில் அமெரிக்க எரிவாயு, பொறியியல் நிறுவனமான 'லிண்டே' S$1.9 பில்லியன் மதிப்பில் அதன் வளாகத்தை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் ஹைட்ரஜன், செயற்கை வாயுவின் உற்பத்தியை அது நான்கு மடங்கு அதிகரிக்க உள்ளது.
'எக்சான்மொபில் ஏஷியா பசிபிக்' நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி வளாகம், 'லிண்டே'யின் முக்கிய வாடிக்கையாளராக இருக்கும். அடுத்த பல ஆண்டுகளுக்கான அடிப்படையை அமைத்து, நீண்டகாலச் செயல்பாட்டின் மீது சிங்கப்பூர் கவனம் செலுத்துவதற்கு இந்த முதலீடு ஒரு சான்று என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். 'லிண்டே'யின் புதிய கட்டடத்துக்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட திரு சான் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்த வளாகம் 2023ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படுவதுடன் லிண்டேயின் தற்போதைய வளாகத்துடன் ஒருங்கிணைக்கப்படும். பெட்ரோலிய ஏற்றுமதியில் உலக நாடுகளிடையே ஐந்தாவது இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் தற்போதைய போட்டித்தன்மை மிக்க, நிச்சயமற்ற தன்மையுடைய சூழலில் தன்னை வேறுபடுத்திக்கொள்வது அவசியம் என்றார் திரு சான். 'லிண்டே', 'எக்சான்மொபில்' போன்ற நீண்ட கால முதலீட்டாளர்களை ஈர்க்க, கொள்கை உருவாக்கத்தில் முரண்பாடற்று, ஒத்திசைவாக இருப்பதுடன் நிலையான வர்த்தகத்துக்கு ஏற்ற சூழலை சிங்கப்பூர் அளிக்க வேண்டும் என்றார் அவர். சிங்கப்பூர் மலிவான இடம் இல்லை என்றாலும் மதிப்புக் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இது மற்றவர்களை முந்த முடியும் என்றார் அவர்.
எரிஎண்ணெய், சுத்திகரிப்பு ஆலையிலிருந்து பெறப்படும் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து மசகு, வடிநீர்மம் போன்ற கூடுதல் மதிப்பிலான பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் 'எக்சான்மொபில்' அதன் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு ஹைட்ரஜன், செயற்கை வாயு போன்றவை தேவைப்படுகின்றன.
'எக்சான்மொபில்' நிறுவனத்தின் விரிவாக்கமும் 2023ஆம் ஆண்டில் நிறைவுபெறும். பின்னர், குறைந்த அளவிலான சல்ஃபரைக் கொண்ட எரிபொருள் உற்பத்தியை அது அதிகரிக்க முடியும். 'எக்சான்மொபில்' மட்டுமின்றி ஜூரோங் தீவில் இருக்கும் தி சிங்கப்பூர் ரிஃபைனரிஸ் உட்பட மற்ற நிறுவனங்களுக்கும் 'லிண்டே'யின் செயல்பாடு உதவும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஏஞ்சல் கூறினார். "கடந்த 20 ஆண்டுகளில் $200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதைவிட ஏழு மடங்கு முதலீடு இந்த ஒரே திட்டத்தில் செய்யப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.
இந்த முதலீடு இந்த ஆண்டின் முக்கியமான முதலீடுகளில் ஒன்று என்று அமைச்சர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தனர். பிரிட்டிஷ் நிறுவனமான டைசான், சுகாதார மருத்துவ நிறுவனம் 'ஜிஎஸ்கே' போன்றவையும் அண்மையில் முதலீடுகள் செய்துள்ளன. பொருளியல் வளர்ச்சி மந்தமடைந்துள்ளபோதும் சிங்கப்பூரின் அடிப்படைகள் வலுவாக இருப்பதை இந்த முதலீடுகள் காட்டுகின்றன. 'லிண்டே'யின் விரிவாக்கத்தால் மதிப்புக்கூடிய உற்பத்தி வேலைகள் 70 உருவாகும் என்று 'லிண்டே'யின் ஆசிய பசிபிக் தலைமை நிர்வாகி சஞ்சீவ் லம்பா குறிப்பிட்டார்.

