கடனில் சிக்கி இருக்கும் 'ஹைஃபிளக்ஸ்' தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் 88 விழுக்காட்டு உரிமையைத் தனக்கு வழங்கும் உடன்பாடு ஒன்றில் 'யுட்டிகோ' நிறுவனம் கையெழுத்திட்டு உள்ளது.
'ஹைஃபிளக்ஸ்' நிறுவனத்துக்குக் கடன் கொடுத்தவர்கள், முதலீடு செய்தவர்கள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு அந்த உடன்பாடு காரணமாக ஒரு தீர்வு ஏற்படும் என்று ஐக்கிய அரசு சிற்றரசுகளைச் சேர்ந்த யுட்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகச் சபையின் ஆதரவு காரணமாக விரைவான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் இதனால் எல்லா திட்டங்களும் சூடுபிடிக்கும் என்றும் புதிய திட்டங்களும் இடம்பெறும் என்றும் யுட்டிகோ மேலும் தெரிவித்தது.
கையெழுத்தான உடன்பாடு பற்றிய மேல்விவரங்களை அது தெரிவிக்கவில்லை. இதனிடையே, சிங்கப்பூர் பங்குச் சந்தையில் நிறுவனத்தைப் பட்டியலிடும்போது அறிவிப்பு விடுக்கப்படும் என்று ஹைஃபிளக்ஸ் கூறியதாக பிசினஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
யுட்டிகோ நிறுவனம், $300 மில்லியன் பங்கு முதல் மூலமாகவும் $100 மில்லியன் பங்குதாரர்கள் கடன் வழியாகவும் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தில் 88 விழுக்காட்டு உரிமையைத் தான் எடுத்துக்கொள்ளப்போவதாக ஏற்கெனவே இணங்கி இருந்தது.
ஹைஃபிளக்ஸ் நிறுவனம் ஏறக்குறைய $3 பில்லியன் கடன்சுமை காரணமாக சென்ற ஆண்டு நொடித்துப்போனது. தனக்கு உதவக்கூடிய நிறுவனங்களைத் தேடும் முயற்சியை அது தொடங்கியது.
ஹைஃபிளக்ஸின் தலைமை நிறுவனமான துவாஸ்பிரிங் நிறுவனத்தை இந்த ஆண்டு மே மாதம் பொதுப் பயனீட்டுக் கழகம் எடுத்துக் கொண்டுவிட்டது.
புதிய உடன்பாட்டை அடுத்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தனி நிறுவனமாக ஹைஃபிளக்ஸ் இருக்கும். அதில் யுட்டிகோ 88% உரிமையைக் கொண்டிருக்கும்.

