ஆளில்லா வானூர்தி உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் 16 வயது நிரம்பி இருக்க வேண்டும். சுமார் 250 கிராம் எடையுடன் மேலே கிளம்பும் எல்லா சாதனங்களையும் பதிவு செய்யவேண்டும். இது வெளிநாட்டுக்காரர்கள், சுற்றுப் பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உரியதாக இருக்கும்.
இப்படி பதிந்து கொண்டதற்குப் பிறகுதான் சிங்கப்பூரில் ஆளில்லா வானூர்திகளை இயக்க முடியும்.
இத்தகைய வானூர்திகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஓர் ஏற்பாட்டை உருவாக்குவதற்காக அரசாங்கம் ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தது.
அந்தக் குழு முன்வைத்து இருக்கும் பரிந்துரைகளில் இவை அடங்கும். அத்தகைய கருவிகளைப் பதிவு செய்யும் நடைமுறை எளிதாக, வசதியாக, தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஒரு சாதனத்திற்கான பதிவுக் கட்டணம் $20. பதிவுக்கு ஊக்கமூட்டும் வகையில் மூன்று மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்து உள்ளது.
ஆலோசனைக் குழு தன்னுடைய பரிந்துரைகளைப் போக்குவரத்து அமைச்சிடம் தாக்கல் செய்துள்ளது. இதர தொடர்புடைய அம்சங்களைத் தொடர்ந்து தான் மறுபரிசீலனை செய்து மேலும் பரிந்துரைகளைத் தாக்கல் செய்யப்போவதாக குழு தெரிவித்து உள்ளது.
புதிய பரிந்துரைகளில் கடுமையான தண்டனைகள் இடம்பெற்று இருக்கும் என்று தெரியவருகிறது.
சிங்கப்பூரில் விமானநிலையங்கள், ராணுவத் தளங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்ட 5 கி.மீ. பரப்பளவுக்குள் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடக் கூடாது என்று இப்போது தடை இருக்கிறது.
அவற்றை 61 மீட்டருக்கும் அதிக உயரத்தில் பறக்கவிட முடியாது. இந்த விதியை மீறுவோருக்கு $20,000 அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
சாங்கி விமானநிலையத்தின் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இரண்டு ஆளில்லா வானூர்திச் சம்பவங்கள் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்ததை அடுத்து சட்டங்களைக் கடுமையாக்குவதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பரிந்துரைகள் தாக்கலாகி உள்ளன. 'ஆளில்லா வானூர்தி ஆலோசனைக் குழு' என்ற அந்தக் குழுவில் 12 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அந்தக் குழு போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்னுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியது. ஆளில்லா வானூர்திகளைப் பதிய வேண்டியது கட்டாயம் என்று அந்தக் கடிதத்தில் குழு பரிந்துரைத்து உள்ளது.
இதனிடையே, அந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஆராயும் என்றும் உரிய நேரத்தில் அமலாக்கத் திட்டங்களை அறிவிக்கும் என்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் டாக்டர் லாம் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் பழுத்த அனுபவம் வாய்ந்த விமானியான டி சூசா தலைமையிலான அந்தக் குழு, இந்தத் துறையைச் சேர்ந்த சுமார் 150 பேருடன் கலந்து ஆலோசித்து பரிந்துரைகளை உருவாக்கியது.

