சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் சட்டத்திற்கான மாற்றங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். புதிய மிரட்டல்களைப் பரந்த முறையில் குறித்த காலத்தில் திறம்பட அரசாங்கம் கையாளுவதற்கு அந்த மாற்றங்கள் வழிவகுக்கும்.
பிரதமர் லீ சியன் லூங் இது பற்றி திங்கட்கிழமை அறிவித்தார். அரசாங்கம் கடந்த 30 ஆண்டுகளில் சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு உள்ள அதிகாரத்தை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் சூழ்நிலை எவ்வளவோ மாறிவிட்டது என்று திரு லீ கூறினார்.
பொய்ச் செய்திகளைப் பரப்பி பாதகச் செயல்களை அரங்கேற்றுமாறு மக்களைத் தூண்டிவிடுவது, இப்போது சமூக ஊடகங்களின் பரவல் காரணமாக மிகவும் எளிதாகிவிட்டது என்று சிங்கப்பூர் அனைத்துச் சமய மன்றத்தின் 70வது ஆண்டுவிழா விருந்தில் பேசியபோது திரு லீ குறிப்பிட்டார்.
சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் 1990ல் நிறைவேற்றப்பட்டது. அதற்கு இரண்டாண்டு கழித்து நடப்புக்கு வந்தது.
சமய நல்லிணக்கத்தைக் கீழறுக்கும் வகையில் பேசுகின்ற, செயல்படுகின்ற சமயப் பிரமுகர் களுக்கு எதிராக அரசாங்கம் கட்டுப்பாட்டு உத்தரவுகளை விதிக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.
அத்தகைய உத்தரவுகளை மீறுவோருக்குச் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்க முடியும்.
"பரஸ்பர நம்பிக்கையைப் பலப்படுத்துவதில் சிங்கப்பூர் பெரும் முன்னேற்றம் கண்டு வந்து இருக்கிறது. சிங்கப்பூர் இப்போது பிணைப்புமிக்க சமூகமாக உள்ளது.
"மக்கள் உணர்வுபூர்வமான விவகாரங்களை வெளிப்படையாக விவாதிக்கிறார்கள். ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் மரியாதை கொடுக்கிறார்கள்," என்று திரு லீ தெரிவித்தார்.
சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றாலும் சிங்கப்பூரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டி வர அந்தச் சட்டம் உதவி இருக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், மக்கள் சில நேரங்களில் அதை அலட்சியமாகக் கருதுகிறார்கள் என்றார்.
சட்டத்திற்கான மாற்றங்கள் பற்றி பிரதமர் தெரிவிக்கவில்லை என்றாலும் அந்த மாற்றங்கள் தொடர்பில் சமயத் தலைவர்களுடன் பரவலாக கலந்து ஆலோசிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் அளித்துள்ள ஆதரவுக்காகத் தான் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் பிரதமர் திரு லீ தெரிவித்தார்.
சமய நல்லிணக்கச் சட்டத்தை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி சென்ற மாதம் சட்ட உள்துறை அமைச்சர் கா சண்முகம் அறிவித்தார்.

