உடல்நலத்துக்கு உகந்த உணவு பழக்கவழக்கங்களைச் சிறார் மனதில் பதியவைக்கவும் பழங்கள் உடல்நலத்துக்கு முக்கியமானவை என்பதை உணர்ந்து, பழங்களைப் பார்த்ததுமே அவற்றைச் சாப்பிட வேண்டும் என்ற வேட்கையைச் சிறாரிடத்தில் உண்டுபண்ணவும் நேற்று பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
புக்கிட் பாத்தோவில் உள்ள பிபிஐஎஸ் பாலர் மேம்பாட்டு நிலையத்தில் வாழைப்பழ டால்ஃபின், தர்பூசணி பீசா, பழ மரவட்டை முதலான பலவற்றையும் சிறார்கள் உருவாக்கி உண்டு மகிழ்ந்தனர்.
உடல்நலத்துக்கு உகந்த பழக்கவழக்கங்களைப் போதித்த அந்த நிகழ்ச்சியில் உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் சிறார்களுடன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
உடற்பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறார்களுடன் அவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். புக்கிட் பாத்தோக் நிலையத்தில் 18 மாதம் முதல் 6 வயது வரை உள்ள பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சுகாதார மேம்பாட்டு வாரியம் 'எனது நலமிக்க தட்டு உணவு' என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கி இருக்கிறது. அந்தச் சாப்பாட்டுத் தட்டில் பாதி பழங்களும் காய்கறிகளும் இருக்கும். நார்ச்சத்துள்ள உணவு கால்வாசி இருக்கும். மீன், இறைச்சி, அவரை விதை போன்றவை மீதி இடத்தை நிரப்பியிருக்கும்.
இத்தகைய சரிசமவிகித, சுவைமிக்க உணவு உடல்நலத்துக்கு ஏற்றது என்பதால் சுகாதார மேம்பாட்டு வாரியம் இதைப் பிரபலப்படுத்தி ஊக்குவித்து வருகிறது.
திரு அம்ரின் சிறார்களுடன் இத்தகைய சரிசமவிகித உணவை உண்டு அவர்களுக்கு இது பற்றி போதித்தார்.
பிபிஐஎஸ் அமைப்பு நேற்று 'பழத்துடன் வெள்ளிக்கிழமை' என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியது. சாப்பாட்டில் பழத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது எந்த அளவுக்கு முக்கியம் என்பதைச் சிறார்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
புக்கிட் பாத்தோக் நிலையத்தில் இது சோதனை அடிப்படையில் நடப்புக்கு வந்தது. அங்குள்ள சிறார்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு பழத்துடன் பள்ளிக்கூடம் வருவார்கள்.
உடல்நலத்துக்கு ஏற்ற உணவைப் பகிர்ந்துகொள்வதற்காக சிறார்களின் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
'வெள்ளிக்கிழமை பழம்' திட்டம் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இதர ஆறு பிபிஐஎஸ் நிலையங்களுக்கு விரிவடையும்.

