சுயநினைவில்லாமல் ஆபத்தான நிலையிலிருந்த ஆறு மாதக் குழந்தையை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பியோடிய ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஊட்ரம் சாலையிலுள்ள மருத்துவமனையில் குழந்தையைக் கைவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) அந்த 28 வயது ஆடவர் கைதானார். அவர் உட்லண்ட்ஸில் பிடிபட்டதாக போலிசாரும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
வெள்ளிக்கிழமையன்று கம்போங் பாரு சாலையில் போலிசார் அவரது காரை வழிமறித்தபோது, அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரது காரில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்ததை போலிசார் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, போலிசாரும் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவும் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டன.
இதன்வழி உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒளிந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆடவர் கைதானபோது அவ்வீட்டில் 19 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
குழந்தை சித்ரவதை, போக்குவரத்து, போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக ஆடவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கைவிடப்பட்ட குழந்தைக்கு மருத்துவக் கவனிப்பு அளிக்கப்படுகிறது.
குழந்தையைச் சித்ரவதை செய்த குற்றத்திற்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை சிறை, $4,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறை, $20,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

