துவாஸில் உள்ள ஆபத்தான கழிவுப்பொருள் சுத்திகரிப்பு ஆலையில் தீப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்த "பாதுகாப்பற்ற வேலை நடைமுறைகளுக்காக", இகோ ஸ்பெஷல் வேஸ்ட் மானேஜ்மன்ட் ( ) நிறுவனத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி 230,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
நிறுவனம் "அதன் ஊழியர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்குப் போதிய நடவடிக்கைகளை" மேற்கொள்ளத் தவறியதாக மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
எண் 23, துவாஸ் வியூ சர்க்கியூட் எனும் முகவரியில் அமைந்திருந்த ஆலையில், 2017 பிப்ரவரி 23ஆம் தேதி தீப்பிடித்தது. ஊழியர் ஒருவர் ஹெக்சேன் திரவத்தைப் (liquid hexane) பிளாஸ்டிக் கலனுக்குள் கொட்டிக்கொண்டிருந்தபோது தீ மூண்டது. அந்தத் தீ வேகமாகப் பரவி ஆலையில் பாதியைப் பாதித்தது.
தீயைக் கட்டுப்படுத்த 200க்கும் மேலான தீயணைப்பாளர்கள் நான்கு மணிநேரம் போராடினார்கள். இச்சம்பவத்தில் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை. ஆலை பெருமளவு சேதமடைந்தது.
எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய ஹெக்சேன் திரவத்தைப் பத்திரப்படுத்தி வைப்பதற்குப் பிளாஸ்டிக் கலன்கள் பொருத்தமானவையா என்பதை உறுதிப்படுத்துவதற்கான சோதனையை நிறுவனம் மேற்கொள்ளத் தவறியதாக விசாரணையில் தெரியவந்தது.
நிறுவனம் பயன்படுத்திய கலன், ஹெக்சேன் கொட்டப்படும்போது உற்பத்தியாகும் மின்னிறக்கத்தைச் சிதறடிப்பதற்குப் பொருத்தமாக இல்லாததால் தீ மூண்டதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

