சிங்கப்பூரில் உள்ள ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து தண்ணீர் கசிவதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்தக் காணொளி உண்மையில் கடந்த சனிக்கிழமை ஷாங்காய் மாலில் எடுக்கப்பட்டது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குப் பேட்டியளித்த ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர், அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்றார்.
"மேற்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதைக் காட்டும் காணொளி ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் எடுக்கப்படவில்லை," என்றும் அவர் சொன்னார்.
இந்தக் காணொளியைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பொய்ச் செய்தி பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஜுவலில் மேற்கூரை இடிந்துவிட்டதாக தகவல் எதுவும் வரவில்லை என்று கூறியது.
கடைத் தொகுதி ஒன்றில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளியில் மேற்கூரை இடிந்து தண்ணீர் கொட்டுவதைக் காட்டுகிறது. இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருவது போலிசாரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று அறியப்படுகிறது.

