பணிப்பெண் கொல்லப்பட்ட சம்பவம்; பங்ளாதேஷுக்கு தப்பியோடிய சந்தேக நபருக்கு வலைவீச்சு

பணிப்பெண் கொல்லப்பட்ட சம்பவம்; பங்ளாதேஷுக்கு தப்பியோடிய சந்தேக நபருக்கு வலைவீச்சு

2 mins read

பணிப்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பங்ளாதேஷுக்குத் தப்பியோடிய சந்தேக நபரை காவல்துறையினர் இன்னமும் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தெம்பனிஸ் ரோடு காட்டுப் பகுதியில் பணிப்பெண் ஜோனலின் அல்வாரெஸ் ரவிஸின் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பணிப்பெண்ணின் முதலாளிகள் மூன்று நாட்களுக்கு முன்புதான் அவர் காணாமல் போனதாக புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்றது.

அப்போது பேசிய விசாரணை அதிகாரி டெஸ்மண்ட் இங், 34 வயது பிலிப்பீன்ஸ் நாட்டு பணிப்பெண்ணின் மரணம் கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அவரது கணவர் ராஜு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது தேடப்பட்டு வரும் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதியே சிங்கப்பூரிலிருந்து டாக்காவுக்குச் சென்றுவிட்டதாகவும் மரண விசாரணை அதிகாரியான கமலா பொன்னம்பலத்திடம் அவர் கூறினார்.

மரண விசாரணையில் கழுத்து நெரிக்கப்பட்டதால் பணிப்பெண் மரணமடைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2010 பிப்ரவரியிலிருந்து 2011 நவம்பர் வரையில் ரவிஸ் சிங்கப்பூரில் பணிப்ெபண்ணாக பணியாற்றி வந்தார். பின்னர் பணிப்பெண்ணாக பணியாற்ற அவர் ஹாங்காங்குக்குச் சென்றார்.

திரு ராஜு, 2007ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

2015ல் ராஜுவும் ரவிசும் திருமணம் செய்துகொண்டார். இதற்கு மறு ஆண்டு ரவிஸ் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பி பணிப்பெண் வேலையில் சேர்ந்தார்.

ஒரு முறை முதலாளியிடம் பேசியபோது, தனது திருமணம் மகிழ்ச்சியற்றது என்று ரவிஸ் கூறியுள்ளார். கணவருக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு இருந்ததால் விவாகரத்து செய்ய விரும்புவதாகவும் ரவிஸ் சொல்லியிருந்தார். இதற்கிடையே செப்டம்பர் 2ஆம் தேதி இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். பின்னர் தெம்பனிஸ் ரோடு நோக்கிச் செல்லும் பேருந்தில் இருவரும் ஏறிச் சென்ற விவரம் ஈஸி-லிங்க் அட்டை மூலம் தெரியவந்தது.

மறுநாள் காலை ராஜு விமான டிக்கெட்டை வாங்கி பங்ளாதேஷ் சென்றுவிட்டார். ஆறு நாட்கள் கழித்து தெம்பனிஸ் ரோடு புதரில் ரவிஸின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.