ரயில் கதவுகளுக்கும் எம்ஆர்டி நிலைய கதவுகளுக்கும் இடையில் நேற்று ஒரு மாது சிக்கிக்கொண்டார். டௌன்டவுன் ரயில் தடத்தில் உள்ள லிட்டில் இந்தியா நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக எஸ்பிஎஸ் டிரான்ஸிட் தெரிவித்தது. எக்ஸ்போ நிலையத்தை நோக்கிப் புறப்பட்ட ரயிலை நோக்கி பெண் ஒருவர் ஓடினார்.
ரயிலை அவர் நெருங்கியதும் நடைமேடைக் கதவுகள் மூடிக்கொண்டு இருந்தன. அவை முழுமையாக மூடுவதற்குள் பெண் தமது கைகளால் பலவந்தமாகத் திறக்க முயன்றார். அதன் விளைவாக, அந்தக் கதவுகள் திறந்தன.
ஆயினும் ரயில் கதவுகள் மூடிக்கொண்டு இருந்தன. அந்தக் கதவுகளையும் திறக்க அவர் முயன்றார். அதற்குள் நடைமேடைக் கதவுகள் மீண்டும் மூடிவிட்டன. இடையில் பெண் சிக்கிக்கொண்டதைக் கண்டதும் நிலையத்தில் இருந்தவர்கள் உதவி செய்ய ஓடினர்.
ரயில் கதவுகளின் சிறிய இடைவெளிக்குள் வளைந்து நெளிந்து அப்பெண் நுழைவதைக் கண்ட ரயில் ஊழியர் ஒருவர் அவசரகால விசையை இயக்கினார். அதனைத் தொடர்ந்து ரயிலின் கதவுகள் முழுமையாகத் திறந்தன. ஒருவழியாக அந்தப் பெண் ரயிலுக்குள் நுழைந்த பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது.
இந்த 20 விநாடி சம்பவத்தை ஒருவர் காணொளியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றினார். கடுமையான காயங்கள், சேவைத்தடை, பொதுச் சொத்துக்குச் சேதம் போன்றவற்றை விளைவிக்கும் என்பதால் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் பயணிகள் ஈடுபடவேண்டாம் என்று டௌன்டவுன் தடத்தில் ரயில் போக்குவரத்தை இயக்கும் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் கேட்டுக்கொண்டது.

