மூன்று வயது சிறுவனின் உடலில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவன் பயிலும் பாலர் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) இச்சம்பவத்தை விசாரித்து வருகிறது.
சிங்கப்பூரின் கிழக்கு வட்டாரத்தில் உள்ள அந்தப் பாலர் பள்ளியில் படிக்கும் மூன்று வயது சிறுவனின் தாயார் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமது மகனின் கால்களிலும் வயிற்றுப் பகுதிகளிலும் காயங்களைப் பார்த்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அச்சிறுவன் அந்த ஆசிரியரைக் கண்டு அஞ்சுவதால் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என்றும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். சிறுவனின் அடையாளத்தைப் பாதுபகாப்பதற்காக அவனது பெரையும் பள்ளியின் பெயரையும் குறிப்பிட முடியாது.
காயங்களுக்காக அச்சிறுவனை அவனது பெற்றோர் கேகே பெண்கள், சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அவனுக்கு ஏற்பட்ட காயங்கள் அவன் விளையாடியதால் ஏற்பட்ட காயங்கள் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து பெற்றோர் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். பள்ளிக்கும் தகவல் கொடுத்த இரண்டு நாட்களில் சம்பத்தப்பட ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆசிரியர் பாலர் கல்வித் துறையில் கடந்த நான்கு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார் என்றும் சம்பத்தப்பட்ட பாலர் பள்ளியில் ஓர் ஆண்டாக வேலை பார்த்து வந்தார் என்றும் தெரியவருகிறது.

