பக்கவாத நோயாளிகளுக்கு முதுமைக்கால மறதிநோய் (டிமென்ஷியா) வராமல் தடுப்பதற்கான அல்லது தாமதப்படுத்துவதற்கான முன்னோட்டத் திட்டம் பயனளித்ததைத் தொடர்ந்து, அத்திட்டம் சமூகத்திற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்னோட்டத் திட்டத்தில் இடம்பெற்ற நோயாளிகளின் நினைவாற்றல் மேம்பட்டதோடு, அன்றாட நடவடிக்கைகளில் செய்வதிலிருந்த சிரமமும் குறைந்தது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் ஆசிய மக்களுக்கு மிதமான புலனுணர்வு பாதிப்பும் முதுமைக்கால மறதிநோயும் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரிப்பதாகக் கண்டறிந்த ஆய்வு முடிவுகளைத் தேசிய நரம்பியல் கழகம் வெளியிட்ட வேளையில் சமூகத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பக்கவாதப் பாதிப்பு விகிதம் ஆக அதிகமாகவுள்ள நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். ஒவ்வோர் ஆண்டும் 7,000க்கும் மேலான புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். தற்போது சுமார் 82,000 பேருக்கு முதுமைக்கால மறதிநோய் இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 100,000ஐ எட்டிவிடும் என கணிக்கப்படுகிறது.

