அமைச்சர் ஓங்: வேலைகள் தொடரும், வடிவம் மாறும்

அமைச்சர் ஓங்: வேலைகள் தொடரும், வடிவம் மாறும்

2 mins read
0c2c03b4-9478-4aa3-9484-8a4d786904f2
கல்வி அமைச்சர் ஓங் யி காங் -

இன்று இருக்கும் வேலைகளில் பெரும்பாலானவை எதிர்காலத்திலும் இருக்கும் என்றாலும் அவை புதிய வடிவைப் பெற்றிருக்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.

"புதியவற்றை நீங்கள் கற்கவேண்டி இருக்கும். உங்கள் தேர்ச்சிகளைக் கொஞ்சம் வேறுபட்ட முறையில் நீங்கள் பயன்படுத்த வேண்டி இருக்கும். தொழில்நுட்ப வேட்கையுடனும் திறந்த மனதுடனும் நீங்கள் திகழ வேண்டும். இருந்தாலும் அடிப்படை தேர்ச்சிகள் தொடர்ந்து எதிர்காலத்திலும் நிலைத்திருக்கும்," என்று ஒரு பேட்டியில் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

ரஷ்யாவில் காசான் என்ற நகரில் 45வது உலகத் தேர்ச்சி போட்டிகள் நிகழ்ச்சியின் முடிவில் எதிர்கால வேலைகள் பற்றி அமைச்சர் தன் கருத்துகளைத் தெரிவித்து பேட்டியளித்தார்.

"எப்பொழுதுமே எதிர்கால வேலைகளைப் பற்றி நாம் பேசி வருகிறோம். சில நேரங்களில் நமக்கு நாமே பயந்துவிடுகிறோம்,'' என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வேலைகளின் வடிவம் மாறினாலும் அடிப்படை தேர்ச்சிகள் முக்கியமானவை என்று திரு ஓங் வலியுறுத்திக் கூறினார். கல்வி முறையிலும் பயிற்சியிலும் நாம் கற்றுக்கொள்ளும் பல அம்சங்களும் எதிர்காலத்துக்கு இளையர்களையும் முதியவர்களையும் ஆயத்தப்படுத்துவதில் பொருத்தமானவையாக இருக்கின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.

இருந்தாலும் நாம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டு வேலைகளின் பல்வேறு முறைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

வேலை நிலவரங்களின் மாற்றத்திற்கு ஏற்ப உயர்கல்வி முறையும் எப்படி பரிணமிக்க வேண்டும் என்பது பற்றி கருத்து கூறிய திரு ஓங், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தலையெடுத்து வரும் நான்கு போக்குகள் பற்றி குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்கள் தொழில்துறைகளுடன் சேர்ந்து செயல்பட்டு பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றைப் போதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

கல்வியும் கற்றுக்கொள்ள வேண்டியதும் பட்டதாரிகள் உள்ளிட்ட எல்லாருக்கும் ஆயுள் முழுவதும் இடம்பெறக் கூடியதாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

ஏட்டுக்கல்வியாக இருந்தாலும் தொழிற்கல்வியாக இருந்தாலும் இரண்டுமே முடிவில் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதாகவே படிப்படியாக மேம்படும்.

கல்வி என்பது பல துறைகளுக்கும் உட்பட்டதாக பல துறைகளையும் உள்ளடக்கியதாக ஆகும் என்றும் இவையே உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் காணப்படும் நான்கு போக்குகள் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.

உலகெங்கும் இருந்தும் சிங்கப்பூர் கைக்கொள்ளும் தலைசிறந்த நடைமுறைகள் எவை என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஒரே நாட்டிடம் இருந்து மொத்தமாக ஒரு முறையை அப்படியே பெறாமல் சிங்கப்பூர் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அம்சங்களை தேர்ந்தெடுத்து தனக்கே உரிய ஒன்றாக அவற்றை உருவாக்குகிறது என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் எதிர்கால வேலைகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கருத்து கூறிய அமைச்சர், அது பொருளியல் எதிர்காலத்தைச் சார்ந்திருக்கும் என்றார்.