இந்தியாவும் ஆசியானும் பொருளியல் ஒத்துழைப்பை அதிகப்படுத்த இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தென்கிழக்கு ஆசியாவில் பெருகி கிடக்கும் வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
இந்தியாவின் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த சிங்கப்பூர் கருத்தரங்கம் 2019ல் உரையாற்றிய அமைச்சர், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள வாய்ப்புகளை விளக்கினார்.
இந்தியாவைப் போலவே ஆசியானும் இளமையான மக்கள்தொகையைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2030ல் ஆசியானில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 163 மில்லியனை எட்டுமென எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
ஆசியானும் இந்தியாவைப் போலவே வேகமாக நகரமயமாகி வருகிறது என்றார் அவர். "உலக சராசரி வளர்ச்சியைவிட அதிகமாக தென்கிழக்கு ஆசியா 5.4 விழுக்காடு சராசரி வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி US$3 டிரிலியன்.
640 மில்லியன் வாடிக்கையாளர்கள் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கிறார்கள். ஆகையால் வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் அதிகம்,'' என்றார் அமைச்சர்.
ஆசியானுடன் அதிகரித்து வரும் தொடர்புகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும் என்றும் நிதித்துறைத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஏற்படும் வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும் என்றும் அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்தியா, ஆசியானின் ஏழாவது ஆகப் பெரிய வர்த்தக பங்காளி நாடாக இருக்கிறது. இந்தியாவிலும் ஆசியானிலும் மொத்தம் 1.8 பில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இது உலக மக்களில் கால்வாசியாகும். ஆசியான் மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறக்குறைய S$5 டிரிலியன்.
இந்தியாவும் ஆசியானும் 2009ல் தாராள வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டன. பிரம்மாண்ட ஒரு வர்த்தக உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்தையில் இந்தியாவும் ஆசியானும் இப்போது ஈடுபட்டு வருகின்றன.
புதுடெல்லியில் நாளை முக்கிய உரையாற்றும் திரு சண்முகம், இந்திய அமைச்சர்களைச் சந்தித்து இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவார்.

