வரம்பு மீறா சூதாட்டம்: வெளிநாட்டு நடைமுறைகள் பற்றி அரசாங்கம் ஆராய்கிறது

வரம்பு மீறா சூதாட்டம்: வெளிநாட்டு நடைமுறைகள் பற்றி அரசாங்கம் ஆராய்கிறது

2 mins read
359e6264-9f21-4eda-b148-50a56892099d
சூதாட்ட ஒழுங்குமுறை மற்றும் குற்றச்செயல்கள் பற்றிய ஐந்தாவது சிங்கப்பூர் கருத்தரங்கில் உரையாற்றும் மனிதவள அமைச்சர் ஜோசப்ஃபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாடுகளில் சூதாட்டக் கூடங்களை ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள், கைக்கொண்டுள்ள வரம்புமீறா சூதாட்ட நடைமுறைகளை சிங்கப்பூர் ஆராய்கிறது.

சிங்கப்பூரில் சூதாட்டக் கூடங்களுக்குச் செல்வோர், அங்கு எவ்வளவு நேரத்தை, எவ்வளவு பணத்தைச் செலவிட்டு இருக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அவர்களை எச்சரிக்கும் தகவல்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு விரைவில் ஏற்படப்போகிறது.

சூதாட்டப் பித்துப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தைத் தடுக்கும் வகையில் மக்கள் பொறுப்புடன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது.மனிதவள அமைச்சர் ஜோசப்ஃபின் டியோ நேற்று இந்த விவரங்களை அறிவித்தார்.

சூதாடுவோர், எவ்வளவு நேரம் சூதாட வேண்டும் என்பதையும் எவ்வளவு தொகை செலவழிக்க வேண்டும் என்பதையும் தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து அதன்மூலம் பொறுப்புடன் சூதாட்டத்தில் ஈடுபட வகை செய்யும் நடவடிக்கைகளின் தொடர்பில் சிங்கப்பூரின் சூதாட்ட ஒழுங்கு முறை ஆணையம் சூதாட்டக் கூடங்களுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டாவது உள்துறை அமைச்சருமான திருவாட்டி டியோ, சூதாட்ட ஒழுங்குமுறை மற்றும் குற்றச்செயல்கள் பற்றிய ஐந்தாவது சிங்கப்பூர் கருத்தரங்கில் உரையாற்றினார்.

அந்தக் கருத்தரங்கில் உலகம் முழுவதையும் சேர்ந்த சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகாரிகளும் சூதாட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள். வெளிநாடுகளில் உள்ள சூதாட்டக் கூடங்கள் அமல்படுத்தும் பொறுப்புடன்கூடிய வரம்பு மீறா சூதாட்ட நடவடிக்கைகள் மூலம் சிங்கப்பூர் பலவற்றையும் கற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பொறுப்புடன் சூதாட்டத்தில் மக்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க பல முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் சூதாட்டக் கூடங்களுக்கான நுழைவுக்கட்டண அதிகரிப்பு, ஆண்டுதோறும் நடக்கும் வரம்பு மீறா சூதாட்ட புரிந்துணர்வு வாரம் போன்றவற்றை அமைச்சர் ஜோசப்ஃபின் டியோ எடுத்துக்காட்டாகக் கூறினார்.

தொழில்நுட்பங்கள் காரணமாக இணையச் சூதாட்டம் அதிகரித்து வருகிறது என்றும் இதனால் ஏற்படும் மாற்றங்களை கையாளவேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதாகவும் இது சூதாட்ட ஒழுங்குமுறை நிறுவனங்களுக்குச் சவால் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இளைஞர்கள் அதிகம் விரும்பும் புதிய பாணி சூதாட்டங்கள் இரண்டாவது சவால் என்றார் அவர்.