சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புதிய பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. தவறான பாலியல் நடத்தைகளுக்கு ஆளாகி இருக்கும் மாணவ, மாணவிகள் அந்தப் பிரிவை அணுகி உதவி நாடலாம்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை கல்வி அதிகாரி ஹோ டெக் ஹூவா, மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றில் அந்தப் புதிய பிரிவு பற்றி அறிவித்தார்.
'பாதிக்கப்பட்டோர் பராமரிப்புப் பிரிவு' என்று குறிப்பிடப்படும் அந்தப் பிரிவுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வணிகத் துறை இணைப் பேராசிரியர் சாண்டி லிம் தலைமை தாங்குவார். இத்தகைய ஒரு பிரிவு இதுநாள் வரை உள்ளூர் பல்கலைக்கழகங்கள் எதிலும் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விடுதி ஒன்றில், தான் குளித்துக் கொண்டிருந்தபோது தன்னை சகமாணவர் ஒருவர் படம் எடுத்ததாகவும் அந்த விவகாரத்தை இந்தப் பல்கலைக்கழகம் கையாண்ட முறை தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் கடந்த ஏப்ரலில் இளநிலை பட்டப்படிப்பு மாணவி ஒருவர் இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்ததை அடுத்து இந்தப் புதிய பிரிவு பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

