ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜூலை 2ஆம் தேதி ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் நடைபெற்ற கைகலப்பில் சதீஷ் நோயல் கோபிதாஸ், 31, கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் 22 வயதான டான் ஹோங் ஷெங்கும் ஒருவர்.
நெட்டலி சியோவ் யூ ஷென், 22, லூ பூன் சோங், 25, டான் சென் யாங், 27, ஜோயல் டான் யூன் ஷெங், 26, சான் ஜியா ஸிங், 26, ஆங் டா யுவான், 26 ஆகியோர் மற்ற ஆறு பேர். நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் டான் முன்னிலையாக வேண்டும். ஆனால் அவர் வராததால் கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி லூ, சான் ஆகியோருடன் சேர்த்து டான் ஹோங் ஷெங் மீதான குற்றச்சாட்டு, பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தவர்களுக்கு துணை போனதாக வகைப்படுத்தப்பட்டது.
இதையடுத்து மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவத்தன்று ஆர்ச்சர்ட் டவர்ஸ் இரண்டாவது மாடியில் உள்ள 'நாட்டி கேர்ள் கிளப்பில்' மடக்கக்கூடிய 'கெராம்பிட்' கத்தி வைத்திருந்த டான் சென் யாங் என்பவருக்கு மூவரும் துணை போனதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பயங்கர ஆயுதத்தின் முனை, கூராக வளைந்து காணப்படும். டானைத் தவிர லூ, சான் ஆகிய இருவரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானதால் வழக்கு செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே டான் ஹோங் ஷெங்கின் இன்விக்டஸ் சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசஃபஸ் டான், தனது கட்சிக்காரரின் தாயார் மூன்று நாட்களுக்கு முன்பு போலிசில் புகார் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறினார்.
புகாரின் விவரங்களை வழக்கறிஞர் தெரிவிக்கவில்லை.
டானின் தாயார் மகனை பிணையில் விடுவிப்பதற்காக உத்தரவாதம் வழங்கியிருந்தார். தற்போது டான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை 48 மணி நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் டானின் தாயாருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்பில் டானின் தாயார் அக்டோபரில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி டான் ஏன் வரவில்லை, ஏன் 15,000 வெள்ளி பிணைத்தொகையை பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

