ஞாபக மறதி; முதியோருக்கு உதவ புதிய சமூகத் திட்டம்

ஞாபக மறதி; முதியோருக்கு உதவ புதிய சமூகத் திட்டம்

1 mins read

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே ஞாபக மறதி வராமல் தடுக்கவும் அல்லது அதை தள்ளிப்போடவும் புதிய சமூகத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. முன்னோடித் திட்டத்தில் நோயாளிகள் நல்ல நினைவுடன் அன்றாட நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொண்டனர்.

இதனால் இந்தத்திட்டம் சமூகத்திற்கு விரிவுபடுத்தப்படுத்தப் படுகிறது. ஆசியாவில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் என்று அண்மையில் தேசிய நரம்பியல் கழகம் வெளியிட்ட ஆய்வு தெரிவித்தது.

சிங்கப்பூரும் உலகிலேயே அதிகமானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நாடாக உள்ளது.

சிங்கப்பூரில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 7,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சுமார் 82,000 பேர் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை 2030ல் நூறாயிரத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சமூகத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், ஞாபக மறதி பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார்.

தெமாசெக் அறநிறுவனமும் தேசிய நரம்பியல் கழகத்தின் பக்கவாத நினைவு மறுவாழ்வு நிலையமும் இணைந்து முன்னோடித் திட்டம் ஒன்றை 2017ல் நரம்பியல் கழகத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தின.

இதில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் அடைந்தனர். இவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் தங்களது திட்டமிடும் ஆற்றல் அதிகரித்துள்ளதாகவும் உதவியில்லாமல் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடமுடிவதாகவும் தெரிவித்திருந்தனர்.