சிங்கப்பூரின் ஒரே குப்பை நிரப்பும் நிலப்பகுதியான செமாகாவின் குறைந்துவரும் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவியாக, அரசாங்கம் புதிய குப்பை குறைப்பு இலக்குகளையும் செயல்திட்டத்தையும் வகுத்திருக்கிறது.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள், செமாகாவ் குப்பை நிரப்பும் நிலத்திற்கு மூன்றில் ஒரு பங்கு அல்லது 30 விழுக்காடு குறைவான குப்பைகளை சிங்கப்பூர் அனுப்ப விரும்புவதாகச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தார். இதன்வழி, நிலப்பகுதியின் ஆயுட்காலத்தை 2035ஆம் ஆண்டுக்கு மேலாக நீட்டிக்கமுடியும் என நம்பப்படுகிறது.
செமாகாவ் குப்பை நிரப்பும் நிலம் 2045ஆம் ஆண்டில்தான் முழுமையாக நிரம்பும் என முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கணிப்பு 2035ஆம் ஆண்டுக்கு ஏற்கனவே குறைக்கப்பட்டுவிட்டது.
தற்போது, தினமும் சுமார் 2,100 டன் குப்பைகள் அங்கு அனுப்பப்படுகின்றன. இதில் 600 டன் எரிக்கமுடியாத குப்பைகளும் 1,500 டன் சாம்பலும் உள்ளடங்கும்.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் குப்பைகளின் அளவை மூன்றில் ஒரு பகுதி குறைக்கும் இலக்கை அடைவதற்கு மக்களும், தொழில் நிறுவனங்களும், தொழில்துறைகளும் குப்பைகளைக் குறைத்து, மறுபயனீடு செய்து, மறுசுழற்சி செய்யும் நடைமுறைகளில் மாற்றம் தேவைப்படுகிறது.
இதற்கு விதிமுறைகள், புதிய உள்கட்டமைப்புகள், தொடர் ஆய்வு ஆகியனவும், மக்களை மறுபயனீடு செய்ய ஊக்குவிக்கும் தூண்டுதல்களும் தேவை.
கழிவுகள் இல்லாத தேசமாக உருவெடுக்க முயற்சி செய்யும் சிங்கப்பூருக்கு வழிகாட்ட அவசர நடவடிக்கைகளும் புதிய பெருந்திட்டமும் தேவை என்றார் டாக்டர் கோர்.

