பதினைந்து வயதே ஆன மாணவியுடன் 2015ல் உடலுறவு கொண்டதற்காக முன்னாள் உயர்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) எட்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது 41 வயதாகும் அந்த ஆடவர், மறு ஆண்டு அம்மாணவியைக் கர்ப்பமாக்கினார். இருவரும் 2016ல் பிரிந்தபிறகு, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் 16 வாரக் கருவுடன் கர்ப்பமாக இருப்பதை மாணவி அறிந்தார். அதற்கடுத்த மாதம் அவர் போலிசாரிடம் புகார் செய்தார்.
தற்போது 19 வயதாகும் அந்த மாணவிக்கு இரண்டு வயது குழந்தை இருக்கிறது.
பதின்ம வயது மாணவியின் உணர்வுகளை ஆடவர் "பயன்படுத்திக்கொண்டதாக" மாவட்ட நீதிபதி சே யுவென் ஃபாட் கூறினார். தன்மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்ததன்வழி, தனது செயலுக்கு எவ்விதத்திலும் வருந்தவில்லை என்பதை ஆடவர் வெளிப்படுத்தியதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
வயதுவராத பெண்ணுடன் உடலுறவு கொண்ட குற்றத்திற்காக, ஆடவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.