உச்ச நேரம் தவிர்த்து ரயிலுக்கு அதிக நேரம் காத்திருக்க நேரிடலாம்

உச்ச நேரம் தவிர்த்து ரயிலுக்கு அதிக நேரம் காத்திருக்க நேரிடலாம்

3 mins read
acb93b24-7e76-463f-a967-15ab15a6f1c0
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

எதிர்காலத்தில் உச்ச நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ரயில்களுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்.

நாள் முழுவதும் ரயில் சேவைக்கான தேவை சீராக இருப்பதில்லை எனக் குறிப்பிட்ட போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், தேவைக்கேற்றபடி ரயில்களை இயக்குவது, ரயில் சேவைக் கட்டமைப்பில் தேவையில்லாத தேய்மானத்தைக் குறைக்க உதவும் என்றார். ரயில் சேவை நம்பகத்தன்மை மேம்பட்டுள்ளதை ஒட்டி எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் செங்காங் பணிமனையில் நேற்று நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் கோ கலந்துகொண்டு பேசினார்.

இவ்வாண்டு ஜூலை மாதம், எம்ஆர்டி கட்டமைப்பில் பழுதுக்கு முந்திய சராசரி ரயில் பயண தூரம் 1 மில்லியன் கிலோமீட்ட

ராகப் பதிவானது என திரு கோ தெரிவித்தார். இது, ஐந்து நிமிட நேரத்திற்கும் மேல் பழுதாகி நிற்பதற்குமுன் ஒரு ரயில் ஓடிய தூரத்தைக் குறிக்கிறது.

இரு ரயில்கள் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தை அதிகப்படுத்துவது தொடர்பில் பேசிய திரு கோ, உச்ச நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அதற்குச் சாத்தியமுள்ளது என்றும் தங்களது வழித்தடங்களில் அத்தகைய நடவடிக்கைகளைச் சோதித்துப் பார்க்க ரயில் சேவை வழங்கும் நிறுவனங்களைத் தாம் ஊக்குவிப்பதாகவும் சொன்னார்.

தேவைக்கேற்றபடி வழங்கலும் இருப்பது சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கு இட்டுச் செல்லும் என்றார் இவர். எடுத்துக்காட்டாக, உச்ச நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் 'தைவான் மெட்ரோ' பத்து நிமிடங்களுக்கு ஒருமுறையும் 'ஹாங்

காங் எம்டிஆர்' 14 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயிலை இயக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். "இதன்மூலம் அந்நிறுவனங்கள் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றன. அத்துடன், ரயில் கட்டமைப்பில் தேவையற்ற தேய்மானத்தைக் குறைப்பதோடு, பராமரிப்புச் செலவும் குறைகிறது," என்றார் அமைச்சர் கோ.

இப்போது, எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனங்கள் உச்ச நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்கி வருகின்றன.

சாங்கி விமான நிலையம், துவாஸ் மேற்கு விரிவாக்க வழித்தடங்களில் இரு ரயில்களுக்கு இடையில் அதிக கால இடைவெளி இருந்து வருவதை திரு கோ சுட்டினார். பேருந்துச் சேவைகளுக்கும் இதே முறை பின்பற்றப்படுகிறது. செயல்திறனை மேம்படுத்தி, சிக்கன நடவடிக்கைகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சம் என்ற அமைச்சர், அதற்கான புதிய நடவடிக்கைகள், முயற்சிகள் மூலம் எஸ்எம்ஆர்டியும் எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் $25 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்தியுள்ளன என்றார்.

அண்மைக்காலமாக நடைமுறைச் செலவுகள் அதிகரித்து வருவது ரயில் சேவை வழங்கும் நிறுவனங்களுக்குக் கவலை அளிப்பதாக இருக்கிறது. இவ்வாண்டு மார்ச்சுடன் முடிந்த கடந்த 12 மாதங்களில் 'எஸ்எம்ஆர்டி ட்ரெயின்ஸ்' நிறுவனம் $155 மில்லியன் இழப்பைச் சந்தித்தது. இது, முந்தைய ஆண்டைப் போல கிட்டத்தட்ட இரு மடங்கு எனச் சொல்லப்பட்டது.

ரயில் பயணக் கட்டண வருமானத்தில் கிட்டத்தட்ட 71% பழுதுபார்த்தல், பராமரிப்புக்காக செலவிடப்பட்டது என்றும் மூன்றாண்டுகளுக்குமுன் இது 45 விழுக்காடாக இருந்தது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

இதற்கிடையே, கடந்த மூன்றாண்டுகளில் டௌன்டவுன் வழித்தட சேவையில் மட்டும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திற்கு $125 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய இழப்புகள் தாக்குப்பிடிக்கும் வகையில் இல்லை எனக் குறிப்பிட்ட போக்குவரத்து அமைச்சு, பொதுப் போக்குவரத்து மானியங்கள் அதிகரித்து வரும் சூழலில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படலாம் என்றும் தெரிவித்து இருக்கிறது. செலவுகளை மிச்சப்படுத்த, வருமானம் ஈட்டும் மற்ற வழிகளையும் ரயில் சேவை நிறுவனங்கள் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.