இவ்வாண்டு முதற்பாதியில் மோசடிச் சம்பவங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை குற்றச் செயல்கள் 7 விழுக்காடு அதிகரித்ததற்கு மோசடிச் சம்பவங்கள் காரணமாக விளங்கியதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, இணைய வணிகம், கடன், இணையக் காதல் தொடர்பான மோசடிகள் அதிகரித்தன. குறிப்பாக, பாலியல் சேவை வழங்குவதாகக் கூறி அதற்கு கடன் அட்டை விவரங்கள் அல்லது வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றிவிடுமாறு கோரும் 'கிரெடிட் ஃபார் செக்ஸ்' எனும் மோசடிச் சம்பவங்களும் அதிகரித்தன.
கடன் தொடர்பான மற்றும் 'கிரெடிட் ஃபார் செக்ஸ்' மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட வர்கள் இழந்த ஒட்டுமொத்த தொகையின் மதிப்பும் இவ்வாண்டு முதற்பாதியில் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்தது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 315 கடன் மோசடிகள் பதிவாகியிருந்தன. அவற்றின் மூலம் இழப்பு ஏற்பட்ட தொகையின் மதிப்பு குறைந்தது $670,000. ஆனால், இவ்வாண்டு அதே காலகட்டத்தில் அத்தகைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 692ஆக உயர்ந்தன. அவற்றில் இழப்பு ஏற்பட்ட பணத்தின் மதிப்பு $2.2 மில்லியனாக அதிகரித்தது.
'கிரெடிட் ஃபார் செக்ஸ்' மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முதற்பாதியில் 209ஆக இருந்தது. அவற்றில் இழப்பு ஏற்பட்ட தொகையின் மதிப்பு $464,000. இவ்வாண்டு அதே காலகட்டத்தில் அச்சம்பவங்களின் எண்ணிக்கை 456ஆக கூடியது. அவற்றில் இழப்பு ஏற்பட்ட பணத்தின் மதிப்பு $1.1 மில்லியன்.
'கிரெடிட் ஃபார் செக்ஸ்' சம்பவங்களில் மோசடிக்காரர்களுக்கு பணத்தை மாற்றிவிடுவதற்கு 'ஐடியுன்ஸ்' அட்டைகள் மற்றும் 'அலி பே' தளங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதற்கிடையே, இணைய வணிக, இணையக் காதல் மோசடிச் சம்பவங்களும் அதிகரித்தன.
இணைய வணிகம் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை 1,013லிருந்து 1,435ஆக கூடியது. இத்தகைய மோசடிகளின் எண்ணிக்கையே ஆக அதிகமாக பதிவாகியது. இவற்றின் மூலம் இழக்கப்பட்ட தொகையின் மதிப்பு $870,000லிருந்து $1.2 மில்லியனாக அதிகரித்தது.
'கேரோசெல்' விற்பனைத் தளத்தில் வணிக மோசடிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், ஷாப்பி, லஸாடா போன்ற இணையத்தளங்களில் அது கூடியது.
இணையக் காதல் மோசடிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முதற்பாதியில் 288ஆக இருந்தது. அவற்றில் $11.7 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. இவ்வாண்டு அதே காலகட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் 306ஆக கூடின. அவற்றின் மூலம் இழக்கப்பட்ட தொகையின் மதிப்பு $17.1 மில்லியன்.
மோசடியை ஒடுக்க புதிய மையம்
மோசடிச் சம்பவங்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, மோசடித் தடுப்பு மையம் ஒன்றை போலிஸ் அமைத்துள்ளது. வர்த்தக விவகாரப் பிரிவின்கீழ் இயங்கும் இந்த மையம், மோசடிக்காரர்களின் செயல்பாடுகளை முறியடிப்பதோடு பாதிக்கப்பட்டவர்கள் இழக்கக்கூடிய தொகையின் அளவைக் குறைக்கவும் முற்படும்.

