தங்களது வீட்டில் வசிக்கும் உறவினர் மற்றும் நண்பரைக் கவனித்துக்கொள்வதற்காக வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளும் இனி பணிப்பெண் தீர்வைக்கான சலுகையைப் பெறலாம்.
இந்தச் சலுகை அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக மனிதவள அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர் அல்லாதவருக்கும் சிறந்த பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாட்டுப் பணிப்பெண் தீர்வைச் சலுகைக்கான தகுதி வரையறைகளை அமைச்சு மறுஆய்வு செய்தது.
ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பராமரிப்பதற்காக வெளிநாட்டுப் பணிப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டால் மட்டுமே இதுநாள் வரை பணிப்பெண் தீர்வைச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதிய விதிமாற்றம் மூலம் கூடுதலாக கிட்டத்தட்ட 1,000 பேர் பலனடைவர் என அமைச்சு குறிப்பிட்டது. "சிங்கப்பூரில் பராமரிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் காலப்போக்கில் மாற்றம் கண்டு வந்துள்ளன. தங்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது, ஒரே வீட்டில் வசிக்கும் உறவினர் அல்லது நண்பரைக் கவனித்துக்கொள்ளும் சிங்கப்பூரர்களை மனிதவள அமைச்சு அங்கீகரிக்கிறது," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
உறவினர் அல்லது நண்பரைக் கவனித்துக்கொள்வதற்காக வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு இந்த விதிமாற்றம் சற்று ஆதரவையும் நிம்மதியையும் அளிக்கும் என்றும் அமைச்சு கூறியது. 16 வயதுக்குட்பட்ட பிள்ளை, குறைந்தது 67 வயதை எட்டியோர் அல்லது ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பால் அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர் ஒருவரால் உடற்குறையுள்ளவர் என சான்றிதழ் அளிக்கப்பட்டவர் ஆகியோரைப் பராமரிப்பதற்காக பணிப்பெண்களை வேலைக்கு வைத்துள்ள முதலாளிகளுக்கு தீர்வைச் சலுகை கிடைக்கும்.
அதே நேரத்தில், பராமரிப்புச் சேவை பெறுபவர் சிங்கப்பூரராக இருக்க வேண்டும். அத்தகைய ஒருவரைக் கவனித்துக்கொள்வதற்காக புதிதாகப் பணிப்பெண்களை அமர்த்திக்கொள்பவர்களும் அது குறித்து தங்களது விண்ணப்பங்களில் குறிப்பிடவேண்டும். அவர்களுக்குத் தானாகவே தீர்வைச் சலுகை வழங்கப்பட்டுவிடும்.
உறவினர் அல்லது நண்பரைப் பராமரிப்பதற்காக ஏற்கெனவே பணிப்பெண்களை வேலைக்கு வைத்திருப்போர் பணிப்பெண் தீர்வைச் சலுகை பெற இன்று முதல் மனிதவள அமைச்சுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலாளியும் பராமரிப்புச் சேவை பெறுபவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.

