பெட்ரா பிராங்கா அருகே கடலில் இருந்து நேற்று இரண்டு பேர் மீட்கப்பட்டனர். சிங்கப்பூர், இந்தோனீசிய அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை மூலம் அந்த இருவரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஹோர்ஸ்பர்க் கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 4.3 கடல்மைல் தொலைவில் உயிர் காப்பு உடைகள் அணிந்திருந்த இரண்டு பேர் கடலில் காணப்படுவதாக வெள்ளிக்கிழமை தனக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று ஊடக அறிக்கையில் குறிப்பிட்டது.
அந்த இருவரும் காணப்பட்ட இடம், சிங்கப்பூர் கடல்துறை தேடி மீட்பு எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். அந்த இருவரையும் மீட்கும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஒருமுகப்படுத்தியது.
போலிஸ் கடலோர காவல்படை, சிங்கப்பூர் குடியரசு கடற்படை ஆகியவற்றுடன் சிங்கப்பூர் ஆகாயப் படையின் சூப்பர் பூமா ஹெலிகாப்டரும் பணியில் ஈடுபட்டன. இந்தோனீசிய தேசிய தேடி மீட்பு முகவை தரை கலன் ஒன்றை அனுப்பி உதவியதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
கடைசியில் அந்த இருவரும் இந்தோனீசிய கலன் ஒன்றின் மூலம் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு பாத்தாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

