கேலாங்கில் கத்திக்குத்து: 28 மணி நேரத்தில் 6 பேர் கைது, போதைப்பொருள் பறிமுதல்

கேலாங்கில் கத்திக்குத்து: 28 மணி நேரத்தில் 6 பேர் கைது, போதைப்பொருள் பறிமுதல்

2 mins read
7cdd5d77-9aeb-47d0-8a5f-b8a6bb549c28
கேலாங் கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான சோதனைகளில் ஆறு பேர் கைதானது பற்றி போலிஸ் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தது. அப்போது இந்தப் பொருட்களை போலிஸ் காட்டியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

கேலாங்கில் சென்ற வெள்ளிக்கிழமை விடிகாலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு கத்திக்குத்துச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்த 28 மணி நேரத்திற்குள் போலிஸ் ஆறு நபர்களைச் கைது செய்தது. அந்த விவரங்களை போலிஸ் நேற்று விளக்கியது.

கேலாங் லோரோங் 39ல் சாதாரண சிறு பிரச்சினைக்காக 24 மற்றும் 26 வயதுள்ள இரண்டு பேர் கத்தியால் குத்தப்பட்டனர். இதுபற்றி போலிசுக்கு விடிகாலை 1.25 மணிக்குத் தகவல் கிடைத்தது.

ஒரே மணி நேரத்தில் சந்தேக நபர் ஒருவரை போலிஸ் அடையாளம் கண்டது. அந்த 53 வயது ஆடவர் போதைப்பொருள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர். ஜாலான் சுல்தானில் அவரைப் பிடிக்க போலிஸ் முயன்றபோது அந்த நபர் ஒரு வாகனத்தில் போக்குவரத்தை எதிர்த்துச் சென்று தப்பிவிட்டார்.

இருந்தாலும் ஜாலான் சுல்தானில் ஒரு ஹோட்டல் அறையில் சனிக்கிழமை விடிகாலை 12.30 மணிக்கு அவரை போலிஸ் கைது செய்தது.

அறையில் 5 கிராம் ஐஸ், 5 எக்டசி மாத்திரைகள் இருந்தன. 25 மற்றும் 20 வயதுள்ள இதர இரண்டு ஆடவர்களும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக பிடிபட்டனர்.

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் அந்த நபரின் பதுங்குமிடத்தில் சோதனையிட்டதில் மேலும் போதைப்பொருட்களும் இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இரண்டாவது சந்தேக நபர் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் வெள்ளிக்கிழமை இரவு தன்னுடைய காரில் இருந்தபோது பிடிபட்டார். இந்த 37 வயது நபருடன் 32 வயது வெளிநாட்டு பெண்மணி ஒருவரும் சிக்கினார்.

பல வகை போதைப்பொருட்களும் தராசும் இதர பொருட்களும் $5,920 ரொக்கமும் பிடிபட்டன. அதிகாரிகளின் சோதனையில் மொத்தம் $67,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின.

கேலாங் கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பிலான மூன்றாவது நபர் சனிக்கிழமை காலையில் சாய் சீ ஸ்திரீட்டில், புளோக் 43ல் சிக்கினார். ஆபத்தான ஆயுதங்களால் வேண்டுமென்றே காயம் விளைவித்தது, போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது ஆகியவற்றுக்காக அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவர் போதையர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

போதைப்பொருளைக் கடத்தியதாக சனிக்கிழமை 53 மற்றும் 37 வயது ஆடவர்கள் மீதும் 32 வயது வெளிநாட்டு பெண்மணி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

எஞ்சிய இரண்டு சந்தேகப்பேர்வழிகள் பிணையில் இருக்கிறார்கள். தகவல் கிடைத்த 28 மணி நேரத்துக்குள் ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டது ஒரு சாதனை என்று தெரிவித்த பிடோக் போலிஸ் பிரிவு தளபதி ஜூலியஸ் லிம், அந்தப் பிரிவின் அதிகாரிகளையும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளையும் பாராட்டினார்.

பிடிபட்ட சந்தேகநபர்களிடம் புலன்விசாரணை நடந்து வருகிறது.