ஒன் நார்த் தொழிற்பேட்டையில் பாதசாரிகளுக்கு அதிக சாலை வசதிகள் கிடைக்க இருக்கின்றன. ஃபியூஷனோபோலிஸ் வே சாலையின் சுமார் 60 மீட்டர் பகுதி, பாதசாரிகள் நடந்து செல்வதற்கான வசதிகளுடன் கூடிய சாலையாக மாற்றப்படும்.
இந்த நடவடிக்கை செப்டம்பர் முடிவில் இருந்து நவம்பர் தொடக்கம் வரையில் ஒரு சோதனை முயற்சியாக இடம்பெறும். கூடுதலான அந்த இடம் சமூக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளப்படும். இந்த மாற்றங்களை ஜூரோங் நகராண்மைக் கழகம் மேற்பார்வையிடுகிறது. இந்தக் கழகம் 6 கி.மீ. நடைபாதைகளின் அகலத்தை இப்போதைய 1.5 மீட்டரிலிருந்து 2.5 மீட்டராக அல்லது 3.5 மீட்டராகக் கூட்டும். அந்தத் தொழிற்பேட்டையை, கார் இல்லாத பகுதியாக ஆக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இவை இடம்பெறுகின்றன.
அந்தப் பகுதியில் வார முடிவு நாட்களில் கார்களைத் தவிர்த்துக்கொள்ளும் இயக்கத்தின் இரண்டாவது நாளன்று இந்தத் திட்டங்களை கழகம் அறிவித்தது. அந்தப் பேட்டையைச் சுற்றிலும் வேலை பார்க்கும் ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு பசுமைச் சூழலை ஏற்படுத்தித்தரவும் இயற்கை வளத்தையும் காக்கும் தொழிற்பேட்டையாக ஒன் நார்த் பகுதியைக் கட்டிக்காக்கவும் இடம்பெறும் முயற்சிகளையொட்டி இவை மேற்கொள்ளப்படுவதாக கழகம் தெரிவித்துள்ளது.
கார்களைக் குறைத்துக்கொண்டு, இயற்கைக்கு உகந்த போக்குவரத்து முறைகளைக் கைக்கொள்வதால் தூய்மைக்கேடு குறையும். கார்கள் மூலம் ஏற்படக்கூடிய இரைச்சல் உள்ளிட்ட தொல்லைகள் இல்லாத, உயிரோட்டம் மிக்க குடியிருப்புப் பேட்டை உருவாகி அந்தப் பகுதியினருக்கு இதனால் நன்மை ஏற்படும் என்று ஜூரோங் நகராண்மைக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

