ஆன்லைன் சிட்டிசன் இணையத் தளத்தில் "பிரதமர் லீயின் மனைவி ஹோ சிங் குடும்ப உறுப்பினர்களுடன் உறவுகளை முறித்துக்கொள்வது பற்றி வினோதமான முறையில் தகவல் பகிர்ந்துகொள்கிறார்," என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் கட்டுரையையும் அந்தக் கட்டுரைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஃபேஸ்புக் முகவரியையும் உடனடியாக அகற்றிவிட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
இன்னும் மூன்று நாட்களுக்குள் அதாவது, செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் முழுமையான, நிபந்தனையற்ற முறையில் அந்த இணையத்தளம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பொய்யான குற்றச்சாட்டுகளைத் தனது இணையத்தளத்திலும் (https://www.theonlinecitizen.com/ ) ஃபேஸ்புக் பக்கத்திலும் (https://www.facebook.com/theonlinecitizen) வெளியிடப்போவதில்லை என்று அது உறுதி தெரிவிக்க வேண்டும் என திரு லீ கோரியிருக்கிறார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இவற்றைச் செய்யவில்லை என்றால் சட்டப்படி தனக்குள்ள முழு உரிமைகளையும் பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளத்திற்கு நேற்று அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் சார்பில் அவருடைய பத்திரிகை செயலாளர் திருவாட்டி சாங் லி லின் இந்த விவரங்களைத் தெரிவித்து இருக்கிறார். ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையும் ஃபேஸ்புக் பதிவும் பிரதமர் லீக்கு எதிராக அவருடைய சகோதரியான டாக்டர் லீ வெய் லிங் ஏற்கெனவே தெரிவித்து இருந்த பல பொய்யான குற்றச்சாட்டுகளை மறுபடியும் கூறுவதாக இருக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக, 38 ஆக்ஸ்லி ரோடு சொத்தை சிங்கப்பூர் அரசாங்கம் அரசிதழில் குறிப்பிட்டு இருப்பதாகவும் அந்த வீட்டை இடித்துவிடும்படி திரு லீ குவான் இயூ வெளிப் படுத்தி இருக்கும் விருப்பத்துக்கு மாறாக அமைச்சரவை அந்த வீட்டை இடிக்கக்கூடாது என ஏகமனதாக முடிவெடுத்திருப்பதாக நம்பவைத்து அதை நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்றும் திரு லீ குவான் இயூவை பிரதமர் நிைனக்க வைத்தார் என்றும் அவை கூறுகின்றன.
அந்த வீட்டை இடித்துவிட வேண்டும் என்று தொடக்கத்தில் விரும்பி இருந்த திரு லீ குவான் இயூ, பிரதமர் திரு லீ அவருக்குத் தவறான வழியைக் காட்டியதன் காரணத்தினால், அந்த வீடு தொடர்பில் மாற்று வழிகள் பற்றி யோசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறது. பின்னர், 2013ஆம் ஆண்டு அந்த வீடு அரசிதழில் வெளியிடப்படவில்லை என்று தெரிந்ததும் திரு லீ குவான் இயூ, பிரதமர் லீயை தனது உயிலின் அறங்காவலர் பொறுப்பிலிருந்தும் தமது சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்தும் தமது உயில்கள் அனைத்திலும் நீக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, மற்ற பல பொய்யான குற்றச்சாட்டுகள் போல் பொய்யானது.
இதில் உண்மை என்னவென்றால், அந்த வீட்டை அரசு கையகப்படுத்திக் கொள்ளுமானால், அதன் தொடர்பில் பிரதமர் லீயின் உடன்பிறப்புகள் நஷ்டஈடு தொடர்பாக பிரச்சினை எழுப்ப நேர்ந்தால், பிரதமர் லீயை தான் தர்மசங்கடமான நிலையில் உள்ளாக்க விரும்பவில்லை என திரு லீ குவான் இயூ பிரதமரிடம் விளக்கியிருந்தார். அதனால், அவர் பிரதமரை 2011க்குப் பிறகு தான் எழுதிய உயில்களில் அறங்காவலராகவும் சொத்து நிர்வாகியாகவும் நியமிக்கவில்லை.
இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அறவே ஆதாரமே இல்லை என்பதை கடிதத்தில் பிரதமர் சுட்டி இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 2017ல் திரு லீ முழு விளக்கம் அளித்தது உள்ளிட்ட பல விவரங்களையும் பிரதமரின் கடிதம் விளக்கியது. ஆன்லைன் சிட்டிசனில் இடம்பெற்றுள்ள கட்டுரையும் ஃபேஸ்புக் பதிவும் இதர பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் பிரதமர் தெரிவித்து உள்ளார். அவை அவதூறானவை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த விவகாரத்தில், தமது பெற்றோரின் நற்பெயருக்கு களங்கம் வரக் கூடும் என்பதால், தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பிரதமர் முடிவு செய்திருந்தார். ஆனால் பிரதமர் லீ எப்போதுமே நீதிமன்ற நடவடிக்கையை எடுக்காமல் இருந்துவிடுவார் என்பது அதற்கு பொருளல்ல.
தேவை ஏற்பட்டால் தான் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கி இருந்தார். உடன்பிறப்புகளுக்கு எதிராக பிரதமர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்பதற்காக மற்றவர்களும் அவருக்கு எதிராக பொய் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளைத் திரும்பத் திரும்ப பரப்பலாம் என்று தவறாகப் பொருள் கொண்டுவிட முடியாது. இப்படித்தான் ஆன்லைன் சிட்டிசன் கட்டுரையும் ஃபேஸ்புக் பதிவும் செய்து இருக்கின்றன. தன்னுடைய நேர்மைக்கும் நடத்தைக்கும் விடப்பட்டு இருக்கும் இத்தகைய பாதகமான தாக்குதல்களை, அதுவும் பிரதமர் பொறுப்பில் இருந்து அரசாங்கத்திற்குத் தலைமை ஏற்க தான் பொருத்தமானவர்தானா என்ற நோக்கத்தில் விடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்களை மறுத்து அவற்றை, தேவை எனில் சட்ட நடவடிக்கை மூலமாக பகிரங்கமாகக் கைக்கொள்ள வேண்டிய தேவை தனக்கு இருக்கிறது என்று அந்த இணையத்தளத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்.

