தனிநபர் நடமாட்டச் சாதனங்கள், சைக்கிள்கள், மின்-சைக்கிள்கள் ஆகியவற்றின் ஓட்டுநர்கள், பதினைந்து நகர மன்றங்களிலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடக் கீழ்த்தளங்களிலும் பொது நடமாட்ட வெற்றிடங்களிலும் இனிமேல் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
பொதுச்சொத்து, வெளிப்புற வெற்றிடங்கள் ஆகியன தொடர்பான துணைச்சட்டங்களில் மக்கள் செயல் கட்சி திருத்தங்கள் செய்ததை அடுத்து இந்தத் தடை நடப்புக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) அன்று இந்தத் தடை செயல்படுத்தப்பட்டது.
ஆயினும், ஓட்டுநர்கள் புதிய விதிமுறைக்கு உடன்படுவதற்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் மட்டும், புதிய விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்துகொள்ளும் முதன்முறை குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும். அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் புதிய விதிமுறை கடுமையாகச் செயல்படுத்தப்படும் என்று நகர மன்றங்கள் தெரிவித்தன.
விதிமுறைகளை மீறுவோருக்கும் கவனக்குறைவாக ஓட்டுவோருக்கும் 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோரை அடையாளம் காண கிட்டத்தட்ட 70,000 கண்காணிப்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படும்.
பொதுப்பாதைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம்.

