உயிரிழந்த பணிப்பெண்ணின் படம் ஒன்றுடன் வேறு சில படங்களைச் சட்டவிரோதமாகச் சமூக ஊடகங்களில் பகிர்ந்த முன்னாள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானி ஒருவருக்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 29 வயது ஃபஸ்லி ஹிஷாம் முகம்மது ஃபைருஸ் ஷாவுக்கு அவரது காதலி அந்தப் படங்களை அனுப்பியதை அடுத்து, அவர் வாட்ஸ்அப் குழு ஒன்றுக்கு அவற்றை அனுப்பினார்.
ஃபஸ்லியின் காதலி, 'யூனிஸ்ட்ராங் டெக்னாலஜி' என்ற தனியார் மருத்துவ உதவி வாகன நிறுவனத்தில் பணியாற்றினார். அவரது வேலைச் சகாவான மருத்துவ உதவி வாகன ஓட்டுநர் ஷெய்க் ஹசிக் ஃபாஹ்மி ஷெய்க் நசைர் ஜோஹார், 29, சம்பவம் நடந்த இடம் ஒன்றுக்குச் சென்றபோது அந்தப் படங்களைத் தனது கைப்பேசியில் எடுத்துக்கொண்டார்.
இறந்த பணிப்பெண்ணைக் காட்டும் அந்தப் படங்களை 'எஸ்டிஎன்21' என்ற வாட்ஸ்அப் குழுவுக்கு ஜோஹார் அனுப்பினார். அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த நூரிஸா அஃபிகா ஹுசேன், தன் காதலனான ஃபஸ்லிக்கு அந்தப் படங்களைச் சட்டவிரோதமாக அனுப்பினார்.
அதிகாரபூர்வ ரகசியங்கள் தொடர்பான சட்டத்தை மீறியதன் தொடர்பில் படங்களை எடுத்த ஷெய்க் ஹசிக் ஃபாஹ்மிக்கும் அவற்றை வாட்ஸ்அப் வழி அனுப்பிய நூரிஸாவுக்கும் முறையே 1,500 வெள்ளி அபராதமும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவ்விருவரும் 'யூனிஸ்ட்ராங் டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

