மசகோஸ்: பாண்டான் நீர்த்தேக்கத்தில் பரவிய கொசுவின பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்

மசகோஸ்: பாண்டான் நீர்த்தேக்கத்தில் பரவிய கொசுவின பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்

2 mins read
d228853a-3238-4532-a9cb-9305fac5392f
இந்த அரிய வகை கொசுவினப் பூச்சிகள் பொதுமக்களுக்குப் பெரும் தொந்தரவு விளைவிக்கின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாண்டான் நீர்த்தேக்கத்தில் அண்மையில் பரவிவரும் 'மிட்ஜஸ்' எனப்படும் அரிய கொசுவினப் பூச்சிவகையின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பொதுப் பயனீட்டுக் கழகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாக்கடைகளின் பக்கச் சுவர்களில் வழுவழுப்பான மசகு எண்ணெயைக் கழகம் தடவி உள்ளது. கொசுக்கள் அங்கே அமரும்போது சுவர்களில் அவை ஒட்டிக்கொள்ளும். பின்னர் அந்தப் பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்தடிக்கப்படும் என்று திரு மசகோஸ் கூறினார்.

பாண்டான் நீர்த்தேக்கத்துக்கு அருகே வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இந்த வகை பூச்சிகள் பெரும் தொந்தரவு தருகின்றன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த திரு மசகோஸ், 2016ஆம் ஆண்டில் கடைசியாக உருவெடுத்த இந்த பூச்சிகளின் இனப்பெருக்கத்துடன் ஒப்புநோக்க தற்போதைய பிரச்சினை வேறுபட்டது என்று சொன்னார்.

உதாரணத்துக்கு அவை பகல் நேரத்தில் சாக்கடைகளில் ஒளிந்து கொள்ளும். மாலையில் அங்கிருந்து அவை படை எடுக்கும் என்பதை அவர் சுட்டினார்.

"இந்த வகை பூச்சிகள் கடிக்கவோ நோய்களைப் பரப்பவோ செய்யாது. ஆனால், பெரிய எண்ணிக்கையில் அவை பறக்கும்போது பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிக்கும்," என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் கடந்த ஜூலை மாதம் பதிவான அதிக வெப்பமான வானிலையே இந்தப் பூச்சியின் இனப்பெருக்கத்திற்கு காரணமாக அமைந்தது என்று திரு மசகோஸ் கூறினார்.

பாண்டான் நீர்த்தேக்கத்தைத் தவிர்த்து பிடோக், பொங்கோல், சிராங்கூன், மரினா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலும் இந்த கொசுவினப் பூச்சிப் பிரச்சினை இருந்ததை அவர் சுட்டினார்.

இருட்டான பகுதிகளைவிட ஒளி வெளிச்சம் அதிகம் உள்ள பகுதிகளிலேயே இந்தப் பூச்சிகள் பெரிய எண்ணிக்கையில் காணப்

படுவது வழக்கம். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய பொதுப் பயனீட்டுக் கழகம், பாண்டான் நீர்த்தேக்கம் அருகே வெளிச்சமான ஒளிவிளக்குகளைப் பொருத்தியுள்ளது. பூச்சிகளை ஈர்க்க அந்த விளக்குகள் இரவு நேரத்தில் திறந்துவிடப்படும். அவற்றை ஒழிக்க பின்னர் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படும்.