இவ்வாண்டு ஜூலை 26ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 26 'டைஃபாய்ட்' காய்ச்சல் சம்பவங்கள் குறித்து தமது அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 21 உள்ளூர் சம்பவங்களும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து சம்பவங்களும் அடங்கும். உள்ளூர் சம்பவங்களைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டோர் ஆக அண்மையில் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்றார் திரு கான்.
உள்ளூர் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 18 பேரிடமிருந்து பெறப்பட்ட 'டைஃபாய்ட்' கிருமி மாதிரி ஒரேபோல இருப்பது முன்னோட்ட மரபியல் பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாக அவர் சொன்னார். அதாவது, அவர்கள் அருந்திய பொதுவான உணவு அல்லது தண்ணீருடன் இந்தச் சம்பவங்கள் தொடர்புடையவை என்பதை அந்தப் பரிசோதனை காட்டுகிறது.
இந்தச் சம்பவங்களை விசாரிக்க சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் இணைந்து பணியாற்றி வருவதாக திரு கான் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் உணவருந்திய கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் அதில் பெறப்பட்ட உணவு, தண்ணீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகப்படும்படி எந்தவோர் உணவுக் கடையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று திரு கான் சொன்னார்.
இந்நிலையில், 'டைஃபாய்ட்' காய்ச்சல் சம்பவங்களைச் சுகாதார அமைச்சிடம் தெரியப்படுத்துமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

