செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உயர் திறன் கொண்டிருக்கும் சிறிய எண்ணிக்கையிலான தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க உலகளவில் போட்டி நிலவுவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
"இந்த நிலையை சிங்கப்பூர் அமர்ந்து பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தால் நாம் பின்தங்கிவிடக்கூடும்," என்று நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
தாய்லாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இத்தகைய திறனாளர்களை ஈர்க்க ஏற்கெனவே முயற்சி எடுத்து வருவதாகக் கூறிய அவர், தொழில்நுட்ப நிபுணர்களைத் தங்களது நாடுகளில் பணிபுரியச் செய்வதற்கு பிரான்சும் தாய்லாந்தும் சிறப்பு விசா திட்டங்கள் வைத்திருப்பதைச் சுட்டினார்.
இங்கு செயல்படும் தொழிநுட்ப நிறுவனங்கள், வெளிநாட்டுத் திறனாளர்களை வேலைக்குச் சேர்க்க வகைசெய்யும் புதிய Tech@SG திட்டத்திற்கான தேவை உள்ளதா என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே கேட்டார். அத்திட்டம் தொடங்கப்படுவதற்கான காரணங்களை விளக்கியபோது திரு சான் இவ்வாறு கூறினார்.
"இன்று நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தே தொழில்நுட்ப மையமாக சிங்கப்பூர் உருவெடுக்க முடியுமா என்பது தீர்மானிக்கப்படும். எனவே, இப்போதே நாம் வேகமாகச் செயல்பட வேண்டும்," என்றார் அவர்.
எதிர்காலப் பொருளியலுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் முக்கிய பங்காற்றவுள்ள நிலையில், உள்ளூர் ஊழியரணிக்குத் துணை நிற்க மற்ற நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இங்கு தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
உலகில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ச்சியைப் பதிவுசெய்து வரும் வேளையில், சிங்கப்பூரும் இந்த நிலையின் மூலம் பலனடைய இந்த ஏற்பாடு வகைசெய்யும் என்று அவர் கூறினார்.
இத்தகைய வெளிநாட்டு திறனாளர்களை சிங்கப்பூர் ஈர்க்கா
விடில், அதன் போட்டித்தன்மையை அது இழக்கக்கூடும் என்று திரு சான் எச்சரித்தார். மற்ற நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இங்கு பணிபுரிவதால் சிங்கப்பூரர்கள் புதிய சிந்தனைகளை உருவாக்க வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் விவரித்தார்.
"உலகின் பல பகுதிகளிலிருந்து இங்கு வரும் மக்களுடன் சேர்ந்து பணிபுரிய சிங்கப்பூரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஊழியர்களாக அவர்களது போட்டித்தன்மையை அதிகரிக்க இது உதவும்," என்று அவர் சொன்னார்.
இந்நிலையில், வெளிநாட்டு திறனாளர் விவகாரமானது வேலைகள் சம்பந்தப்பட்டது என்பதால் அது உணர்வுபூர்வமான ஒன்று என்பதை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதாக திரு சான் கூறினார்.
"நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் சிங்கப்பூரர்களையே தொடர்ந்து மையமாக வைப்போம். ஒவ்வொரு சிங்கப்பூரரும் அவரது முழு ஆற்றலை அடைய நாங்கள் ஆவனச் செய்வோம்.
"அப்போதுதான் அவர்கள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றி சிங்கப்பூரிலும் அதற்கு அப்பாலும் பல வாய்ப்புகளைக் கைப்பற்ற முடியும்," என்றார் அவர்.

