உடற்குறையுள்ளோரில் 25 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் வேலையில் உள்ளனர் என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்கள் 15 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
வேலை தேடுவோரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக உயரும். அதாவது, உடற்குறையுள்ளோரில் 28.6 விழுக்காட்டினர் வேலையில் உள்ளனர். அதுபோக, 4.2 விழுக்காட்டினர் வேலை தேடுகின்றனர்.
எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கினர் ஊழிரணியில் இல்லை. அவர்களில் பெரும்பாலானோர் உடல்நலப் பிரச்சினைகளையும் உடற்குறையையும் முக்கிய காரணங்களாக சுட்டியதாக திரு ஸாக்கி கூறினார்.
மனிதவள அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டிலிருந்து இந்தத் தகவல்கள் தொகுக்கப்பட்டன.
சமூகம், உணவுச் சேவை, நிர்வாகம் மற்றும் ஆதரவுச் சேவை, உற்பத்தி உள்ளிட்ட தொழில்துறைகளே உடற்குறையுள்ளோரை வேலையில் சேர்த்துக்கொள்கின்றன.

