சிங்கப்பூரில் 1980ஆம் ஆண்டிலிருந்து பிறந்தவர்களுக்கு நீண்டகால உடற்குறை காப்புறுதி கட்டாயமாகிறது. இதற்கு வகை செய்யும் 'கேர்ஷீல்டு லைஃப் மற்றும் நீண்டகால பராமரிப்பு மசோதா' நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
'கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம்' இளம் வயதுள்ள சிங்கப்பூரர்கள் கடுமையான உடற்குறைக்கு ஆளாகும்போது அவர் களுக்கு அடிப்படை பராமரிப்புத் தேவைகளை நீண்டகாலத்திற்கு நிறைவேற்றும்.
1979 அல்லது அதற்கும் முன்பு பிறந்தவர்கள் இந்தத் திட்டத்தில் விரும்பினால் சேர்ந்துகொள்ளலாம். கடுமையான உடற்குறை ஏற்படும் யாருக்கும் இதன்படி மாதம் குறைந்தபட்சம் $600 ரொக்கமாக அவர்களுக்கு உடற்குறை நீடிக்கும் வரை, ஆயுள் முழுவதற்கும் கூட கிடைக்கும். அந்தத் தொகை அவர்கள் விரும்பும் பராமரிப்பைப் பெற உதவும்.
கடுமையான உடற்குறையால் பாதிக்கப்பட்டு இருப்போரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குப் பணம் கிடைப்பதை உறுதிப்படுத்த இந்தக் காப்புறுதித் திட்டத்தின் சந்தாவும் இதன்மூலம் கிடைக்கும் தொகையும் காலவோட்டத்தில் சரிசெய்யப்படும்.
இந்தப் புதிய கட்டாய கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் 2020ல் 'எல்டர்ஷீல்டு' திட்டத்திற்குப் பதிலாக இடம்பெறும். கடுமையான உடற்குறை பாதிப்பு உள்ளவர்களுக்குப் பரந்த அளவிலான காப்புறுதிப் பாதுகாப்பை புதிய திட்டம் வழங்கும். கட்டாய கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை அதிகமாக இருக்கவேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய 15 உறுப்பினர்களில் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவர்களுக்குப் பதிலளித்து பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், அதிகத் தொகை வேண்டுவோர் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் துணை காப்புறுதித் திட்டங்களில் சேர்ந்துகொள்ளலாம் என்று கூறினார்.
அதற்கான சந்தாவை மெடிசேவ் எனப்படும் மருத்துவச் சேமிப்பு கணக்கில் இருந்து செலுத்தலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இருந்தாலும் இப்படிச் செலுத்தும் தொகைக்கு ஆண்டு அடிப்படையில் வரம்பு இருக்கும் என்றார் அவர். இந்தப் புதிய மசோதா காரணமாக, அரசாங்கம் மூன்று காப்புறுதி நிறுவனங்கள் நடத்தி வந்த இப்போதைய எல்டர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டங்களைத் தன் வசம் எடுத்துக்கொள்ளும்.
அதோடு, மத்திய சேம நிதிக் கழகமும் ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையும் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தைக் கூட்டாக நிர்வகித்து மக்களின் உடற்குறை பற்றிய தகவல்களை மதிப்பிடவும் இந்த மசோதா அனுமதிக்கிறது.
காப்புறுதித் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடப்பில் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சந்தா செலுத்த முடிகின்ற, ஆனால் செலுத்த விரும்பாத மக்களுக்கு எதிராக அரசாங்கம் 'கண்டிப்பான ஒரு நிலையை' எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

