தாய்மொழி விலக்கு மதிப்பீட்டை பாதிக்காது

தாய்மொழி விலக்கு மதிப்பீட்டை பாதிக்காது

2 mins read
b1eb2f91-8bea-450e-b9a1-637c3f2f4032
தேசிய தேர்வுக்கான மதிப்பீட்டு முறையைக் கல்வி அமைச்சு மாற்ற இருக்கும்போது குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் பழைய மதிப்பீட்டு முறையைத் தொடர்வது சாத்தியமாகாது என்று பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி கூறினார். அவ்வாறு செய்தால் மற்ற மாணவர்களுடன் தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்ற மாணவர்களை ஒப்பிட முடியாமல் போய்விடும் என்றார் அமைச்சர் இந்திராணி. -

தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்றிருக்கும் மாணவர்களுக்கான புதிய தொடக்கநிலை இறுதி ஆண்டு தேர்வுக்கான (பிஎஸ்எல்இ) மதிப்பீட்டு முறை உயர்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்தல், பள்ளி சேர்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் தற்போதைய டி-ஸ்கோர் மதிப்பீட்டு முறையைப் போலவே இருக்கும் என்று கல்விக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா (படம்) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

22 புள்ளிகளும் அதற்கும் குறைவான புள்ளிகளைப் பெறும் அனைத்து மாணவர்களும் விரைவுநிலைக்குத் தகுதி பெறுவர் என்று குறிப்பிட்ட குமாரி இந்திராணி, இது இரண்டு அணுகுமுறைகளுக்கும் பொருந்தும் எனக் கூறினார்.

இரண்டு அணுகுமுறைகளிலும் சிறப்புக் கல்வித் தேவைகளுடன் தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்றுள்ள மாணவர்கள் விரைவுநிலைக்குத் தகுதி பெறுவர் என்று அண்மைய பிஎஸ்எல்இ முடிவை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகள் காட்டியதாக அவர் தெரிவித்தார்.

தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்றிருக்கும் மாணவர்களுக்கான புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறை தொடர்பாக திருவாட்டி டெனிஸ் புவா, திரு முரளி பிள்ளை, திருவாட்டி ரஹாயு மாஸாம் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு குமாரி இந்திராணி பதிலளித்தார்.

2021ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறையை ஒத்திவைத்து மறுபரிசீலனை செய்யும்படி கல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களில் ஒருவர்

அண்மையில் இணையம் மூலம் ஒரு மனுவைத் தொடங்கி வைத்தார். இதற்கு விளக்கமளிக்கும் வகையிலும் குமாரி இந்திராணியின் உரை அமைந்தது.

புதிய அணுகுமுறையின்படி அடைவுநிலை (ஏஎல்) 6லிருந்து ஏஎல் 8 வரையிலான மதிப்பீட்டுப் புள்ளியை வழங்குவதன் மூலம் தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்ற மாணவர்களை அந்தப் பாடத்தில் மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இணையாக வைப்பதாகவும் இது அவர்களது உயர்நிலைக் கல்வியைப் பாதிக்கும் என்றும் இணையம் மூலம் விண்ணப்பம் செய்தோர் கவலை தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், வழக்கநிலை அல்லது அடிப்படை நிலையில் அதிகாரபூர்வத் தாய்மொழிப் பாடத்தைப் பயிலும் பெரும்பாலான மாணவர்களைக் கருத்தில் கொண்டு மதிப்பீட்டு முறை முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

சிங்கப்பூர் மாணவர்களில் 90 விழுக்காட்டினர் அதிகாரபூர்வ தாய்மொழிப் பாடம் ஒன்றைப் பயில்வதாகவும் வழக்கமான பள்ளிகளில் பயிலும் சிறப்புக் கல்வி தேவைகள் கொண்ட மாணவர்களில் 70 விழுக்காட்டினர் தாய்மொழிக் கல்வியைப் பயில்வதாகவும் அவர் தெரிவித்தார்.

"அடிப்படை தாய்மொழிப் பாடம் பயில்வோருக்கு ஏஎல்6லிருந்து ஏஎல்8 வரையிலான மதிப்பீட்டுப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. எனவே, தாய்மொழிப் பாடம் பயிலாதோருக்கு எவ்வாறு தங்களைவிட அதிகமான மதிப்பீட்டுப் புள்ளிகள் வழங்கப்பட்டன என்று தாய்மொழிப் பாடம் பயில்வோரிடம் நியாப்படுத்துவது மிகவும் சிரமம்," என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.

தேசிய தேர்வுக்கான மதிப்பீட்டு முறையைக் கல்வி அமைச்சு மாற்ற இருக்கும்போது குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் பழைய மதிப்பீட்டு முறையைத் தொடர்வது சாத்தியமாகாது என்று பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி கூறினார். அவ்வாறு செய்தால் மற்ற மாணவர்களுடன் தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கு பெற்ற மாணவர்களை ஒப்பிட முடியாமல் போய்விடும் என்றார் அமைச்சர் இந்திராணி.