பொதுப்போக்குவரத்து கட்டணம் 10 காசுகள் வரை உயரலாம்

பொதுப்போக்குவரத்து கட்டணம் 10 காசுகள் வரை உயரலாம்

1 mins read
71a113c0-a7d9-4810-9f97-78b4e74da4e3
பேருந்து, ரயில் கட்டண மறு ஆய்வைத் தொடங்கியுள்ளது பொதுப் போக்குவரத்து மன்றம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பேருந்து, ரயில் கட்டணங்கள் அடுத்த ஆண்டு 7% வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து மன்றம் அதன் வருடாந்திர மறுஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது.

போக்குவரத்து அட்டையைப் பயன்படுத்தக்கூடிய பயணிகளின் கட்டணம் 10 காசுகள் வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிரது. பயணிகளில் சுமார் 90 விழுக்காட்டினர் அட்டைகளைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள தற்போதைய கட்டண கணக்கீட்டு முறையின்கீழ் அனுமதிக்கப்படும் ஆக அதிகமான கட்டண உயர்வு அளவு இது. இந்தக் கட்டண உயர்வு அனுமதிக்கப்பட்டால் அண்மைய ஆண்டுகளில் ஆக அதிகமான கட்டண உயர்வாக இது இருக்கும்.

பொதுப்போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது கட்டண விண்ணப்பத்தை இம்மாதம் 23ஆம் தேதிக்குள் பொதுப் போக்குவரத்து மன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மன்றத்தின் நேற்றைய (செப்டம்பர் 3) அறிக்கை தெரிவித்தது.

எரிபொருள் செலவு, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவை கட்டண உயர்வுக்கான முக்கிய காரணிகளாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய பேருந்துகள், 200க்கு மேற்பட்ட புதிய ரயில்கள் கடந்த ஐந்தாண்டுகளில் அறிமுகம் கண்டுள்ளதையடுத்து பொதுப்போக்குவரத்தின் தரம் பெரிதும் உயர்ந்துள்ளதாக மன்றம் தெரிவித்தது.

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரயில்களின் நம்பகத்தன்மை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய மேம்பாடுகள் இருந்தபோதும் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய கட்டணம் சராசரியாக 4 முதல் 7 காசுகள் வரை குறைவு என்பதை மன்றம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்