பேருந்து, ரயில் கட்டணங்கள் அடுத்த ஆண்டு 7 விழுக்காடு வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து மன்றம் அதன் வருடாந்திர மறுஆய்வுப் பணியைத் தொடங்கிள்ளது.
பொதுப் போக்குவரத்து அட்டையைப் பயன்படுத்தக்கூடிய பயணிகளின் கட்டணச் செலவில் 10 காசு வரை உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. பயணிகளில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் இந்த அட்டைகளைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள தற்போதைய கட்டணக் கணக்கீட்டு முறையின்கீழ் அனுமதிக்கப்படும் ஆக அதிகமான கட்டண உயர்வு அளவு இது.
இந்தக் கட்டண உயர்வு அனுமதிக்கப்பட்டால் அண்மைய ஆண்டுகளில் ஆக அதிகமான கட்டண உயர்வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களது கட்டண விண்ணப்பத்தை இம்மாதம் 23ஆம் தேதிக்குள் பொதுப் போக்குவரத்து மன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அம்மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
எரிசக்தி செலவு அதிகரிப்பு, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பயனீட்டாளர் விலைக் குறியீடு அதிகரிப்பு போன்றவை கட்டண உயர்வுக்கான முக்கிய காரணிகளாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள், 200க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் கடந்த ஐந்தாண்டுகளில் அறிமுகம் கண்டுள்ளதையடுத்து பொதுப் போக்குவரத்தின் தரம் பெரிதும் உயர்ந்துள்ளதை மன்றம் சுட்டியது.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரயில்களின் நம்பகத்தன்மை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. சேவை தாமதங்களுக்கு இடையில் எம்ஆர்டி கட்டமைப்பில் ரயில்கள் ஒரு மில்லியன் கிலோ மீட்டர் தூரம் ஓடுகின்றன.
இத்தகைய மேம்பாடுகளுக்கு செலவு ஏற்பட்டபோதும் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய கட்டணம் சராசரியாக 4 முதல் 7 காசுகள் வரை குறைவு என்பதையும் மன்றம் சுட்டியது.
2015ஆம் ஆண்டிற்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடையில் எரிசக்தி விலை குறைந்ததால் அந்தக் காலகட்டத்தில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் 8.3 விழுக்காடு குறைந்தன. ஆனால், கடந்த ஆண்டு கட்டணம் 4.3 விழுக்காடு கூடியது.
"கடந்த ஐந்து ஆண்டுகளில், செலவினத்துக்கும் கட்டணங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது.
"இந்த இடைவெளியைச் சரிக்கட்டுவதற்கான நிதியை அரசாங்கமும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் இணைந்து வழங்கின," என்று மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வின் அளவு குறித்து பொதுப் போக்குவரத்து மன்றத்தின் முடிவு இவ்வாண்டு கடைசிக் காலாண்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

