அடுத்த ஆண்டு 28 பள்ளிகளில் தரம் பிரித்தல் முறை அறிமுகம்

அடுத்த ஆண்டு 28 பள்ளிகளில் தரம் பிரித்தல் முறை அறிமுகம்

2 mins read
8c29eb0a-6d49-45ae-a26a-ed80dfcb8496
-

உயர்நிலைப் பள்ளிகளில் பாட அடிப்படையிலான தரம் பிரித்தல் முறையைப் பரிசோதனையிடும் முன்னோட்டத் திட்டத்தை அடுத்த ஆண்டு 28 உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கும்.

இந்தத் தரம் பிரித்தல் முறையைச் சோதனையிடும் 28 பள்ளி

களின் பெயர்களைக் கல்வி அமைச்சு நேற்று முதன்முறையாக வெளியிட்டது.

பாட அடிப்படையிலான தரம் பிரித்தல் முறையின்கீழ், மாணவர்

களின் ஆற்றலைப் பொறுத்து அவர்கள் எந்த நிலையில் வேண்டு மானாலும் பாடங்களை எடுத்துப் பயில முடியும்.

இந்த முறையைச் சோதனையிடும் பள்ளிகளில் பிடோக் கிரீன் உயர்நிலைப் பள்ளி, பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி (உயர்நிலை), பெய் ஹுவா உயர்நிலைப் பள்ளி, செயிண்ட் பேட்ரிக்ஸ் பள்ளி உள்ளிட்டவை அடங்கும்.

இந்தப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் உயர்நிலை 2லிருந்து புவியியல், வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகிய மானுடவியல் பாடங்களைக் கடினமான நிலையில் எடுத்துப் பயில முடியும்.

ஏற்கெனவே ஆங்கில மொழி, கணிதம், அறிவியல், தாய்மொழி ஆகிய பாடங்களுக்கு மட்டும் இவ்வாறு செய்ய முடிந்தது.

வழக்கமாக நடப்பில் உள்ள விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) ஆகிய தரம் பிரித்தல் முறைக்குப் பதிலாக புதிய ஏற்பாடுகளை இந்தப் பள்ளிகள் சோதித்துப் பார்க்கும்.

பல்வேறு பிரிவுகளில் உள்ள மாணவர்கள் ஒரே வகுப்பில் இடம்பெறுவர். அதன் அடிப்படையில், அவர்கள் பொதுவான பாடங்களை எடுத்துப் பயில்வர். ஓவியமும் கைவினையும், பண்புநலன் மற்றும் குடிமையியல் கல்வி, வடிவமைப்பும் தொழில்நுட்பமும், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்கள் இவற்றில் அடங்கும்.

உயர்நிலைப் பள்ளிகளில் சேரும் போது விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) என தொடக்கப் பள்ளி ஆண்டிறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகளின் அடிப் படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்படும் முறை 2024ஆம் ஆண்டில் ஒழிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஓங் யி காங் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

அதற்குப் பதிலாக, பாட அடிப்படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்படும் இந்தப் புதிய முறை அதே ஆண்டு அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் நடப்பிற்கு வரும்.

பிஎஸ்எல்இ தேர்வில் மாணவர்களின் செயல்பாட்டையும் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளையும் பொறுத்து அவர்கள் மதிப்பிடப்படுவர்.

தயார்நிலை, பல்வேறு கற்றல் திறன்கள் உடைய மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் அனுபவம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த 28 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு கூறியது.

மாணவர்களின் மாறுபட்ட கற்றல் தேவைகளைக் கருத்தில்கொண்டு அவற்றைப் பூர்த்திசெய்ய ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாட அடிப்படையிலான தரம் பிரித்தல் முறையை 2022 முதல் 2024ஆம் ஆண்டு வரை கூடுதலான உயர்நிலைப் பள்ளிகள் அறிமுகப்படுத்தும் என்று அமைச்சு சொன்னது.