மதுபோதையில் இருந்த மாதை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவருக்கு ஆறரை ஆண்டு சிறை, பிரம்படி

மதுபோதையில் இருந்த மாதை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆடவருக்கு ஆறரை ஆண்டு சிறை, பிரம்படி

1 mins read
e5fc237e-e6a2-482d-86b9-7e8bf75760cc
-

பொது இடத்தில் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த மாதை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மானபங்கம் செய்த ஆடவர் ஒருவருக்கு நேற்று முன்தினம் ஆறரை ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அந்த 30 வயது மாது, தமது காதலனுடன் பேருந்து நிறுத்த இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னிரவு 1 மணியளவில் இரவு நேர கேளிக்கை விடுதியைவிட்டு புறப்பட்ட அவர்கள், அந்தக் காதலனின் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்ப திட்டமிட்டனர். எனினும், இருவரும் மதுபோதையில் இருந்ததால் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் ஓய்வெடுக்க முடிவெடுத்தனர். சற்று நேரத்தில் அவர்கள் தூங்கிவிட்டனர்.

அப்போது இத்தம்பதியைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்த 40 வயது சிங்கப்பூரரான திருச்செல்வம் மணியத்தின் கவனம் அந்த மாதின் மீது திரும்பியது.அந்த இடத்திலேயே சுற்றித் திரிந்துகொண்டிருந்த திருச்செல்வம், அக்கம்பக்கத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதிசெய்த பின்னர் அந்த மாதைத் தூக்கிச்சென்று அதே பேருந்து நிறுத்தத்தில் வேறொரு இருக்கையில் அமர்த்தினார்.

அந்த மாதைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு அவரை திருச்செல்வம் மானபங்கம் செய்தார். அந்த மாது கண் விழித்தபோது, அருகில் இருந்த கட்டடத்திற்குப் பின்னால் ஓட்டி ஒளிந்துகொண்டார். தமக்கு நேர்ந்த நிலையை அறிந்து கதறி அழத் தொடங்கிய அந்த மாது, தமது காதலனை எழுப்பி நடந்ததை அவரிடம் கூறினார். ஜாலான் புக்கிட் மேராவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி அதிகாலை 2.50 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து அத்தம்பதி போலிசிடம் புகார் அளித்தனர். அதே நாள் திருச்செல்வம் கைது செய்யப்பட்டார்.