செங்காங்கில் நேற்று முன்தினம் இரவு கார், பேருந்து, டாக்சி ஆகிய மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஹவ்காங் அவென்யூ 6-ஐ நோக்கிச் செல்லும் வழியில் புவாங்கோக் எம்ஆர்டி நிலையம் அருகே செங்காங் சென்ட்ரலில் ஏற்பட்ட விபத்து குறித்து இரவு 9 மணிக்குத் தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு கறுப்பு நிற காரின் முன்பகுதி பேருந்தின் முன்பகுதியுடன் மோதி சேதமடைந்த படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த விபத்தில் சிக்கிய டாக்சியும் சேதமடைந்தது.
விபத்தில் காயமடைந்த 38 வயது கார் ஓட்டுநரும் 62 வயது டாக்சி ஓட்டுநரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர். விபத்து குறித்து காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

