சிங்கப்பூர் பெண் ஒருவரின் கணவரைக் கழுத்து நெரித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவர் தாய்லாந்தின் புக்கெட் நகர நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியுள்ளார்.
நார்வேயைச் சேர்ந்த 53 வயது ரோஜர் புல்மென், தற்போது தாய்லாந்தில் தேடப்பட்டுவரும் நபராக இருக்கிறார்.
சிங்கப்பூரில் தங்கி வந்த அமித்பால் சிங் பஜாஜ், ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தன் மனைவியுடன் புக்கெட் தீவின் ஹோட்டல் அறை ஒன்றில் இருந்தபோது புல்மென் திடீரென நுழைந்து அவரைத் தாக்கினார். நடு இரவில் புல்மென் தனது அறையில் சத்தமாகப் பாடியது பற்றி திரு பஜாஜ் ஹோட்டல் பணியாளர்களிடம் புகார் செய்ததை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
தற்காப்புக் கலை நிபுணரான புல்மென் தனது கரத்தால் திரு பஜாஜ்ஜின் கழுத்தைச் சுற்றி வளைத்து மிக இறுக்கமாக அழுத்தியதை ஒப்புக்கொண்டார். ஆயினும் திரு பஜாஜ்ஜைக் கொல்வது தமது நோக்கமல்ல என்றும் புல்மென் கூறினார்.
நோக்கமில்லாக் கொலையின்பேரில் குற்றம் சாட்டப்பட்ட புல்மெனுக்கு புக்கெட் மாநில நீதிமன்றம் ஆகஸ்ட் 26ஆம் தேதி பிணை வழங்கியது. புக்கெட்டுக்குள்ளேயே சுதந்திரமாக நடமாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் புக்கெட்டிலிருந்து ஓடி தற்போது தலைமறைவாய் இருப்பதாக நம்பப்படுகிறது.
உள்ளூர்க்காரர்களின் மிரட்டலாலும் ஊடக நிறுவனத்தார் கொடுக்கும் தொல்லையாலும் தனது கட்சிக்காரர் மிரண்டுபோய் ஓடியதாக புல்மெனின் வழக்கறிஞர் திருவாட்டி சுல்மான் ஹுசெய்ன் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து, சிங்கப்பூரிலுள்ள திரு பஜாஜ்ஜின் குடும்பம் எதுவும் கூற மறுத்துள்ளது.
ஆயினும், இந்த விவகாரம் பற்றி திரு புல்மெனின் குடும்பத்தார் கூறுகையில், "மற்றொருவரைக் கொன்றதை ஒப்புக்கொண்ட ஒரு நபரை இப்படி காவலின்றி அதிகாரிகள் புக்கெட்டில் உலாவ விட்டது எங்களுக்கு வியப்பாக உள்ளது. அவரால் பிற உயிர்களுக்கு ஆபத்து நேரலாம்," என்றனர்.

