போக்குவரத்து பெருநிறுவனம் 'கம்ஃபர்ட் டெல்குரோ' புதிய பேருந்து வாடகைச் சேவை செயலியைச் சோதனை செய்து வருகிறது. இது போன்ற ஒரு சேவைக்கான திட்டத்தை நிலப்போக்குவரத்து ஆணையம் நிறுத்தியதை அடுத்து ‘கம்ஃபர்ட் கனெக்ட்’ செயலி, ‘ஆப்பிள்’ மற்றும் ‘கூகல் பிளே’ செயலிக் கடைகளில் அறிமுகம் காண்கிறது.
ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் தஞ்சோங் ரூவிலும் மேயர் ரோட்டிலும் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இந்தச் சேவை பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டது.
காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையே இயங்கும் இந்தச் சேவையைப் பயனீட்டாளர்கள் 16 நிறுத்தங்களில் பயன்படுத்தலாம். அந்த நிறுத்தங்களில் ஏதாவது ஒன்றைப் பேருந்து ஏறும் இடமாகவும் மற்றொரு நிறுத்தத்தை இறங்குமிடமாகவும் தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒருவர் மட்டும் இதில் பதிவு செய்தாலும் அவருக்காகவே ஒரு பேருந்து வந்து அந்தச் சவாரியை நிறைவேற்றும்.
இந்த மூன்று மாத சோதனைக்காலத்தில் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று 'கம்ஃபர்ட் டெல்குரோ' தெரிவித்தது.