பசுமைக் கட்டட நிதிக்கு $20 மில்லியன் தொகை

பசுமைக் கட்டட நிதிக்கு $20 மில்லியன் தொகை

2 mins read
53784c7c-3411-4b53-ab5d-52a81230d849
-

சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்க தீர்வுகளை அறிமுகப்படுத்த சொத்து மேம்பாட்டாளர்களையும் கட்டட உரிமையாளர்களையும் ஊக்குவிக்கும் தேசிய நிதி ஒன்றுக்கு $20 மில்லியன் தொகை கிடைக்கவுள்ளது.

கட்டடச் சுற்றுச்சூழல் துறைக்கும் ஆய்வுச் சமூகத்திற்கும் இடையிலான பங்காளித்துவத்தை ஊக்குவிக்க இந்தத் தொகை உதவும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.

முதன்முறையாக நடத்தப்படும் 'அனைத்துலக கட்டடச் சுற்றுச்சூழல் வாரம்' எனும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட அவர், பசுமைப் புத்தாக்க நிதிக்கு கிடைக்கவிருக்கும் நிரப்புத் தொகையை அறிவித்தார்.

கட்டடச் சுற்றுச்சூழல் துறையில் உற்பத்தித்திறனை உயர்த்த அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் இந்த நிரப்புத் தொகையும் ஒன்று. உற்பத்தித்திறனிலும் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதிலும் கட்டுமானத் துறை மெதுவாக செயல்படுவதைத் திரு வோங் சுட்டினார்.

சிங்கப்பூரின் புதிய கட்டுமானத் திட்டங்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை 'கட்டடத் தகவல் மாதிரி வடிவம்' (பிஐஎம்) எனும் முப்பரிமாண முறையைக் கடைப்பிடிப்பதையும் திரு வோங் சுட்டிக் காட்டினார்.

"தொண்ணூறு விழுக்காடு என்பது பெரிய அளவிலான எண்ணிக்கையாக தெரியலாம். ஆனால், பிஐஎம் முறையைக் கொண்டு திட்டம் ஒன்றைச் சமர்ப்பிப்பதில் வித்தியாசம் உள்ளது. ஏனெனில், ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த முறையே பயன்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் கோருகிறது.

"பிஐஎம்மின் முழு பலனை நீங்கள் அடைகிறீர்களா? உங்களுக்கு அந்தப் பதில் நன்றாகவே தெரியும்," என்றார் அவர். கட்டட, கட்டுமான ஆணையத்தின் பசுமைமிக்க கட்டட புத்தாக்க திட்டம் 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டபோது தேசிய ஆய்வு அறநிறுவனம் அதற்கு $52 மில்லியனை வழங்கியது. அதற்கு துணையாக இப்போது $20 மில்லியன் தொகை சேர்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 32 திட்டப்பணிகளுக்கு இத்திட்டம் ஆதரவு வழங்கியுள்ளது. எதிர்வரும் துவாஸ் முனைய துறைமுகத்தில் அமையவுள்ள ஆறு மாடிக் கட்டடம் ஒன்றும் அவற்றில் அடங்கும். 2021ஆம் ஆண்டிலிருந்து துவாஸ் துறைமுகத்தின் முதற்கட்ட முனைய செயல்பாடுகள் அனைத்தையும் இந்தக் கட்டடம் நிர்வகிக்கும்.