கட்சித் தலைமைப் பொறுப்பு: சியாம் சீ தோங் விலகக்கூடும்

கட்சித் தலைமைப் பொறுப்பு: சியாம் சீ தோங் விலகக்கூடும்

1 mins read

மூத்த எதிர்க்கட்சித் தலைவரான சியாம் சீ தோங், சிங்கப்பூர் மக்கள் கட்சியின் (சிமக) தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து அடுத்த மாதம் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1996ஆம் ஆண்டு டிசம்பரில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இவர், கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக கட்சியை வழிநடத்தியுள்ளார். 1984லிருந்து 2011ஆம் ஆண்டு வரை இவர் பொத்தோங் பாசிர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.

சின் மிங் டிரைவில் உள்ள சிமகவின் தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது.

அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறும் அக்கட்சியின் மாநாட்டில் புதிய தலைமைத்துவக் குழு தேர்ந்தெடுக்கப்படும் என்று அந்தக் கட்சி நேற்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை அந்த மாநாடு நடைபெறுகிறது.

சிங்கப்பூர் மக்கள் கட்சி புத்துயிர் பெறுவதற்கும் அதன் தலைமைத்துவம் புதுப்பிக்கப்படுவதற்கும் இந்த மாநாடு வாய்ப்பை வழங்கும் என்று அந்தக் கட்சியின் ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் தனது 25வது ஆண்டு நிறைவை அக்கட்சி குறிக்கவுள்ளது.