பிரதமர் குறித்த ஃபேஸ்புக் பதிவு: இணையத்தளம் அகற்ற மறுப்பு

பிரதமர் குறித்த ஃபேஸ்புக் பதிவு: இணையத்தளம் அகற்ற மறுப்பு

2 mins read

ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு குறித்து பொய்யான குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாகக் கூறி அதனை அகற்ற பிரதமர் லீ சியன் லூங் கோரிக்கை விடுத்ததை 'தி ஆன்லைன் சிட்டிசன்' எனும் இணையத்தளம் ஏற்க மறுத்துள்ளது.

இது குறித்து பிரதமர் அனுப்பிய கடிதத்திற்கு தான் பதில் அளித்துள்ளதாக அந்த இணைத்தளத்தின் தலைமை ஆசிரியர் டெர்ரி ஸு (படம்) நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் பிரதமர் லீ 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணைத்தளத்தின் ஃபேஸ்புக் பதிவை நேற்று புதன்கிழமைக்குள் அகற்றிவிட்டு முழுமையான, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும், அப்படி கேட்காவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னர் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கட்டுரை ஞாயிறு மாலை அகற்றப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 15ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட கட் டுரை அகற்றப்படாமலேயே உள்ளது.

இதன் தொடர்பில் பிரதமர் லீக்கு திரு ஸு எழுதிய கடிதத்தில், அந்தக் கட்டுரையில் அவதூறு பரப்பும் கருத்துகள் இல்லை என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் உள்ளவை பிரதமரின் உடன்பிறப்புகளான திரு லீ சியன் யாங், டாக்டர் லீ வெய் லீங் ஆகியோர் பொதுவெளியில் கூறிய கருத்துகளைக் கொண்டுள்ளதால் அந்தக் கட்டுரை ஒரு நியாயமான விமர்சனம் என்றும் திரு ஸு கூறியுள்ளார்.

பிரதமர் லீயின் உடன்பிறப்புகள் கூறியவற்றையே தாம் பதிவேற்றம் செய்துள்ளதாக திரு ஸு மேலும் கூறினார். எனினும், எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு அரசிதழில் வெளியான பின்பு திரு லீ குவான் இயூ தமது உயிலில் அறங்காவலராகவும் சொத்து நிர்வாகியாகவும் பிரதமர் நீக்கப்பட்டதாக குறிப்பிட்டதற்கு திரு ஸு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

"திரு லீ குவான் இயூவின் உயிலில் தாங்கள் சொத்து நிர்வாகியாக 2011ஆம் ஆண்டிற்குப் பின் நீக்கியதாக கூறுவது எனது நோக்கமல்ல.

"அத்துடன், எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு அரசிதழில் வெளியிடப்பட்ட காரணத்தால்தான் தாங்கள் அறங்காவலராகவும் சொத்து நிர்வாகியாகவும் நீங்கள் நீக்கப்பட்டீர்கள் என்று கூறும் எண்ணமும் எனக்கு இல்லை," என்று திரு ஸு சொன்னார்.

தான் கூறியது தவறாகப் பொருள்படக்கூடியது என்பதால் இதன் தொடர்பில் தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக திரு ஸு கூறினார்.