கனமழையால் ஜோகூருக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம்

கனமழையால் ஜோகூருக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம்

1 mins read

சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த ஃபயர்ஃபிளை விமானம், கனமழை காரணமாக ஜோகூரின் செனாய் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

இத்தகைய சம்பவம், இவ்வாண்டில் மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளது.

சுபாங் விமான நிலையத்தில் இருந்து நேற்றுக் காலை 6.50 மணியளவில் அந்த எஃப்எஃப்எம்3122 விமானம் புறப்பட்டதாக அறியப்படுகிறது. சிலேத்தார் விமான நிலையத்தில் கருவிகளின் அடிப்படையிலான அணுகுமுறை செயல்பாட்டின் மூலம் விமானத்தைத் தரையிறக்கும் வசதி இல்லை. ஆகவே, ஓடுபாதை தங்களின் கண்களுக்குப் புலப்பட்டால் விமானிகளால் விமானத்தைத் தரையிறக்க இயலும்.

சிங்கப்பூருக்கான தனது சேவைகளைக் கிட்டத்தட்ட ஐந்து மாத காலத்திற்கு நிறுத்தி வைத்திருந்த ஃபயர்ஃபிளை நிறுவனம், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மீண்டும் சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்கத் தொடங்கியது.

அதன்பிறகு, மூன்றாவது முறையாக நேற்று சிலேத்தார் விமான நிலையத்தில் தனது விமானத்தை அந்நிறுவனம் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சுபாங்-சிலேத்தார் விமான நிலையங்களுக்கு இடையே நாள்தோறும் ஆறு விமானச் சேவைகளை அவ்விமான நிறுவனம் இயக்கி வருகிறது. சிலேத்தார் விமான நிலையத்தில் 'ஐஎல்எஸ்' முறையை அறிமுகப்படுத்த மலேசியா எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, அங்கு விரைவில் ஜிபிஎஸ் முறை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.