தெமாசெக் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் டினிய் குர்ரதுவாய்னி, 15, விரைந்து செயலில் இறங்கி, முதலுதவி அளித்து, சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்றினார்.
இவரது சாதுரியமான செயல் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்றுக் காலை பதிவிட்டு, பாராட்டுத் தெரிவித்துள்ளது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை.
தேசிய குடிமைத் தற்காப்பு மாணவர் படையில் இருக்கும் டினிய் பேருந்தில் தமது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பெண் ஒருவர் மீது அந்தப் பேருந்து மோதியது. இதையடுத்து, அந்தப் பெண் சுயநினைவை இழந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தபோதும், துளியும் தாமதிக்காமல் சக பயணி ஒருவரை 995 எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்திவிட்டு, அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளிக்க விரைந்தார் குமாரி டினிய்.
அந்தப் பெண்ணுக்கு நாடித்துடிப்பு இல்லாததை உணர்ந்த குமாரி டினிய், உடனடியாக இதய இயக்க மீட்புச் சிகிச்சையைத் தொடங்கினார். அந்தப் பெண்ணுக்குச் சுயநினைவு திரும்பும் வரை குமாரி டினியின் சிகிச்சை தொடர்ந்தது.
அதன்பிறகு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையினர் சம்பவ இடத்திற்கு வரும் வரையில் இவர் அவ்விடத்திலேயே, அந்தப் பெண்ணுக்கு அருகிலேயே இருந்தார்.
"டினியின் விரைந்து சிந்திக்கும் ஆற்றலும் தன்னலமற்ற செயலும், உயிர்களைக் காக்க வயது ஒரு தடையில்லை என்பதைக் காட்டின," என்று குடிமைத் தற்காப்புப் படை புகழாரம் சூட்டிஇருக்கிறது.
தமது செயலின் முக்கியத்துவம் குறித்து சற்று நேரம் கழித்தே உணர்ந்தார் குமாரி டினிய்.
"வீடு திரும்பியபின், அந்தச் சம்பவம் குறித்து என் பெற்றோ
ரிடம் கூறினேன். அதன்பிறகே, நிலைமையின் தீவிரத்தை நான் உணர்ந்தேன். அந்த இடத்தில் இருந்து, என்னால் உதவ முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய உயிருக்கு அச்சுறுத்தலான சூழல்களில் பயன்படுத்தக்கூடிய திறன்களைக் கற்றுத் தந்தமைக்காக தேசிய குடிமைத் தற்காப்பு மாணவர் படைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார் இவர்.
சம்பவம் பற்றி மறுநாள் தமது வகுப்பாசிரியையிடம் இவர் கூற, பின் குடிமைத் தற்காப்புப் படை மாணவர் படை வழியாக குடிமைத் தற்காப்புப் படைக்குத் தெரிய வந்தது. அதன்பின், இவருக்கு 'சமூக உயிர்காப்பாளர் விருது' வழங்கி கௌரவிக்க குடிமைத் தற்காப்புப் படை முடிவு செய்தது.
இந்-தச் சம்-ப-வம் கடந்த ஜூலை 19ஆம் தேதி, நியூ அப்பர் சாங்கி ரோட்டில் நிகழ்ந்தது.

