தீப்பிடித்து நீருக்குள் மூழ்கிய கப்பலில் சிங்கப்பூரர் இருந்ததாக அஞ்சப்படுகிறது

தீப்பிடித்து நீருக்குள் மூழ்கிய கப்பலில் சிங்கப்பூரர் இருந்ததாக அஞ்சப்படுகிறது

1 mins read
acd24248-d615-4edb-91a6-5bd2ff0a0dc5
-

கலிஃபோர்னியாவின் சாண்டா பார்பராவில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தோரில் சிங்கப்பூரர் ஒருவரும் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய 46 வயது திரு சுனில் சிங் சந்து, அண்மையில் முக்குளிப்பில் பொழுதுபோக்காக ஈடுபடத் தொடங்கியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை அறிந்த அவரது தந்தை, இடிந்துபோனதாக த நியூ பேப்பர் செய்தி இதழிடம் தெரிவித்தார். "என் மனதில் எந்தச் சிந்தனையும் ஓடவில்லை. இவனைப் போன்ற மகனை நான் எங்கு தேடினாலும் கிடைக்காது," என்று ஓய்வுபெற்ற திரு சுனில் சிங் தெரிவித்தார்.

சாண்டா க்ரூஸ் தீவிலிருந்து திங்கட்கிழமை புறப்பட்ட 23 மீட்டர் நீளமுள்ள 'தி கான்செப்ஷன்' என்ற அந்தக் கப்பலில் அதிகாலை 3.15 மணிக்குத் தீ மூண்டது. அப்போது கப்பல் தளத்தின்கீழ் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர். சம்பவத்தின்போது விழித்திருந்த ஐந்து பேர் மட்டும் அனைவரையும் எச்சரித்த பிறகு தப்பித்துக்கொண்டதாக 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.

கலிஃபோர்னியாவின் ஆக மோசமான படகு விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த விபத்தில் மற்றொரு சிங்கப்பூரரும் இறந்திருக்கக்கூடும் என்று 'த நியூ பேப்பர்' தெரிவித்தது.