பகுதிநேர மாணவர்களின் கல்விக் கட்டணங்களும் உதவி நிதிகளும் பரிசீலிக்கப்படவிருப்பதாகப் பிரதமர் திரு லீ சியன் லூங் புதன்கிழமை (செப்டம்பர் 4) கூறினார். உயர்கல்வி பயில்வது மேலும் கட்டுப்படியாக்கப்படும் என சென்ற மாதம் நடைபெற்ற தேசிய நாள் பேரணியின்போது அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
பரிசீலனையைத் தொடர்ந்து, அவசியமானால் இந்தக் கட்டணங்களிலும் உதவி நிதிகளிலும் மாற்றம் செய்யப்படும் என சிங்கப்பூர் சமூகவியல் பல்கலைக்கழகம் முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்த அமைச்சர்நிலை உரையாடல் அங்கத்தில் அவர் குறிப்பிட்டார்.
முழுநேர மாணவர்களுக்குக் கூடுதல் நிதி உதவி, குறைவான கட்டணம் ஆகியவற்றுடன் அரசாங்கம் உதவி செய்திருப்பதைப் போல பகுதிநேர மாணவர்களுக்கு இன்னமும் செய்யப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"நாங்கள் அவற்றைப் பார்த்தோம், ஆனால் இந்தக் கட்டணங்களும் உதவி நிதிகளும் வேலை செய்யும் பெரியவர்களுக்குக் கட்டுப்படியாகவேண்டும் என நினைக்கிறோம்," என்றார் அவர்.
வாழ்நாள் கற்றல், பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றின் மதிப்பு, தொழில்நுட்ப மாற்றங்களின் மத்தியில் எதிர்காலப் பணிமுறை ஆகியன பற்றி பிரதமருக்கும் சுமார் 500 சமூகவியல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு மணிநேர உரையாடலில் பேசப்பட்டது.
சிங்கப்பூரில் தரமான, உற்பத்தித்திறன்மிக்க ஊழியர் அணி இருப்பதாகப் பிரதமர் லீ நம்பிக்கை தெரிவித்தார். இதனால்தான் ஃபின்லாந்தின் நெஸ்டி எண்ணெய் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்கின்றன என்றார் அவர்.
ஆனால், பிறப்பு விகிதமும் ஊழியர் அணியில் சேர்வோர் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், போதுமான சிங்கப்பூரர்கள் இல்லை என்று அவர் கூறினார்.
"எனவே நாம் வெளிநாட்டுத் திறனாளர்களை வரவழைக்காவிட்டால்... நமக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை," என்றார் அவர்.
சிங்கப்பூர் சமூகவியல் பல்கலைக்கழகத்தைவிட மற்ற பல்கலைக்கழகங்கள் சிறப்பாக இருப்பதாக ஒரு கண்ணோட்டம் நிலவுவதாகத் தனக்குத் தோன்றுவதால், தனது வேலை வாய்ப்பு பற்றி பிரதமரிடம் ஆலோசனை கேட்டார் பங்கேற்பாளர் ஒருவர்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் லீ, சமூகவியல் பல்கலைக்கழகம் உயர் தரங்களை நிலைநாட்டவேண்டும் என்றும், பட்டம் பெறும் மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சியடைந்து பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்றும் கூறினார்.
சிங்கப்பூரில் ஒரு புதிய பல்கலைக்கழகம் சேர்க்கப்படும் ஒவ்வொரு முறையும், அதற்கென ஒரு தனித்துவம் காணப்படுகிறது என்றார் அவர்.
சமூகவியலில் கவனம் செலுத்தும் இந்தப் பல்கலைக்கழகம், முக்கியமான சமூக விவகாரங்களைக் கையாளுவதற்கான திறன்களை மாணவர்களுக்கு அளிப்பதாக அவர் சொன்னார்.
"நீங்கள் வழக்கறிஞராக அல்லது தொழில்துறையில், அல்லது சமூகப் பணியில், அல்லது சமூகவியலில், அல்லது தொடர்புத்துறையில் பட்டம் பெற்றாலும், அந்தத் துறையில் உன்னதமாகத் திகழ்ந்தால், முதல்தரமான கல்விக்கழகத்தின் (பட்டதாரியாக) உங்களை நிலைநாட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்," என்றார் பிரதமர் லீ.

